விருதுநகரில் ரூ.500 கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பெண் கைது
விருதுநகரில் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பெண் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இருந்த கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விருதுநகரில் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பெண் கைது செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இருந்த கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கள்ள நோட்டு
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்திருப்பவர் பஞ்சவர்ணம் (வயது 40). இவரது கடைக்கு வந்த ஒரு பெண் பழம் வாங்கிவிட்டு ரூ.500 நோட்டை கொடுத்தார். பஞ்சவர்ணத்திற்கு அந்த ரூபாய் நோட்டை பார்த்ததும் சந்தேகம் வந்தது. பின்னர் தன்னிடமிருந்த ஒரு 500 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.
அப்போது அந்த பெண் கொடுத்த 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் பஞ்சவர்ணத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் இதுபற்றி கேட்டபோது அந்த பெண் பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பஞ்சவர்ணம் அந்த பெண்ணை பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கள்ள நோட்டு பறிமுதல்
இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவர் சிவகாசி வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புத்தாய் (56) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான அந்த பெண் தனது இளைய மகள் துரைச்செல்விதான் தனக்கு இந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் துரைச்செல்வியை (34) வரவழைத்து விசாரித்தனர். துரைச்செல்வி தனது தங்கை கணவர் பாலமுருகன் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரித்தனர். துரைச்செல்வி மற்றும் பாலமுருகனிடமிருந்து 190 கள்ள 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதனைத்தொடர்ந்து போலீசார், பாலமுருகனிடம் கள்ள நோட்டு யாரிடமிருந்து வந்தது என விசாரணை நடத்தினர். சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ள நோட்டை பெற்றதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து போலீசார்அவரை தேடிச் சென்றனர்.
இந்நிலையில் அருண்குமார் போலீஸ் பிடியில் சிக்கியதாகவும், அவரிடமிருந்து கத்தை கத்தையாக 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிவகாசி பகுதியில் தொடங்கி மாவட்டம் முழுவதும் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவதற்கு ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 500 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்தது யார்? எங்கு அச்சடிக்கப்பட்டது? இதற்கு மூல காரணம் யார்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.