பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் திடீர் சாவு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்து தர கால தாமதம் செய்ததால் உறவினர்கள் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-19 17:47 GMT


திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்து தர கால தாமதம் செய்ததால் உறவினர்கள் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை கோணலூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம், கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதா நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். நள்ளிரவில் அவர் குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆபரேஷன் செய்து டாக்டர்கள் தாயின் வயிற்றில் இருந்து குழந்தையை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் அந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சங்கீதா இறப்பு குறித்து இன்று காலை வேட்டவலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணைக்கு பின்னர் திருவண்ணாமலை உதவி கலெக்டரும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

2 இடங்களில் சாலை மறியல்

ஆனால் பிரேத பரிசோதனை செய்யாமல் கால தாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் டாக்டர்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் மாலை 3 மணியளவில் சிகிச்சையில் இருந்த பச்சிளம் குழந்தையும் இறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கீதாவின் உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பும், கோணலூரிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் விரைந்து சென்று நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் கோணலூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தொடர்ந்து சாலை மறியல் போராட்டம்நடைபெற்றது. மேலும் அவர்கள் உயிரிழந்த பச்சிளம் குழந்தையையும் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உரிய விசாரணை நடத்தப்படும்

தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தாசில்தார் சரளா மற்றும் போலீசார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடனடியாக தர வேண்டும். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சங்கீதாவிற்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தாயும், குழந்தையும் இறந்து உள்ளனர்.

மேலும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் சங்கீதாவின் உடலை நாளை மறுநாள் (அதாவது நாளை) வாங்கி கொண்டால் உங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனால் சங்கீதாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார், பணம் கொடுக்கப்படும் என்று தெரிவித்த நபரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். நாளை (சனிக்கிழமை) பிரேத பரிசோதனை செய்து சங்கீதா எவ்வாறு இறந்தார் என்று விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்