தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சிபோலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை

Update: 2023-05-08 19:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ஒரு பெண் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக சென்று பாட்டிலை பிடுங்கி தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

குடிநீர் பிடிப்பதில் தகராறு

இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் பாலவாடி அருகே உள்ள மேல குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாத்திமா (வயது 38) என்பது தெரியவந்தது. இவருடைய கணவர் பெங்களூருவில் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து செய்து வருகிறார். பாத்திமா தனது 2 மகன்களுடன் மேல குள்ளம்பட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஒரு குடும்பத்தினர் பாத்திமாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது என்று அந்த குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்ததாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி தனது 2 மகன்களுடன் வந்து தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்