பெண்,3 ஆட்டோ டிரைவர்கள் தற்கொலை முயற்சி

பெண்,3 ஆட்டோ டிரைவர்கள் தற்கொலை முயற்சி

Update: 2023-03-13 18:45 GMT

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண், 3 ஆட்டோ டிரைவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டோ டிரைவர்கள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 11 மணியளவில் பெண் உள்பட 7 பேர் 3 ஆட்டோக்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து இறங்கினர்.

அவர்கள் மனுகொடுக்கத்தான் வந்தார்கள் என்று போலீசார் நினைத்த வேளையில், திடீரென அவர்களில் 4 பேர், தாங்கள் கொண்டு வந்த கேனில் இருந்த மண் எண்ணெய்யை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதிர்ச்சியடைந்து ஓடி சென்று அவர்கள் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். ஆனால் அவர்களுடன் வந்த பெண் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றியதோடு தீ வைக்கவும் முயன்றார்.

போலீசார் விசாரணை

இதனால் போலீசார் பதற்றத்துடன் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதில் தீக்குளிக்க முயன்றவர்கள் துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது45), அகமது (35), ரகு (38) மற்றும் ஆனந்த குமாரின் தாய் லட்சுமி (60) என்றும், துடியலூர் அண்ணா காலனியில் அவர்களின்ஆட்டோக்களை நிறுத்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தொழில் பாதிப்புஏற்பட்டு, தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனுக்கள்

இதுபோல் கோவை மதுக்கரை காந்திநகரை சேர்ந்த சுமதி (52) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், என்னுடைய வீட்டை அபகரித்த எனது மருமகள் மீதும் உடந்தையாக இருக்கும் எனது மகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோவை பீளமேட்டை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி அளித்த மனுவில்,அவிநாசி சாலையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நவீன கழிப்பிட வசதி,பீளமேடு ெரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றார்.

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்த நடராஜன் (80). என்பவர் தனது வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது பேத்தியுடன் மனு அளித்தார். நேற்று ஒரே நாளில் வீட்டுமனைப்பட்டா 115, இலவச வீடு 68, வேலை வாய்ப்பு 14 உள்பட 383 மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக காரமடையை சேர்ந்த 4பேருக்கு வீட்டுமனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்