பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் பரிதவிக்கும் பொதுமக்கள்; வயல் வரப்பின் வழியாக மூதாட்டியின் பிணத்தை தோளில் சுமந்து சென்ற அவலம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். வயல் பரப்பின் வழியாக மூதாட்டியின் பிணத்தை தோளில் சுமந்து சென்ற பொதுமக்கள் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுடுகாட்டு பாதை
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோனம்பட்டி ஊராட்சி நொனங்கனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே சுடுகாடு உள்ளது. இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குறுகலாக இருந்த சுடுகாட்டு பாதையை பழங்குடி மக்கள் ரூ.5 லட்சத்தை கொண்டு மண்சாலை அமைத்தனர்.
இந்த சாலையின் வழியாக இறந்தவரின் உடல்கள் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. அவ்வாறு வரும்போது அந்த சாலையின் வழியாக பிணங்களை எடுத்து வர அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்சென்று சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பு
இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு சாலையை மீட்டு தரவேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து அரூர் வருவாய் கோட்டாட்சியர், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்ைல என்று கூறப்படுகிறது.
இதனிடையே சுடுகாட்டு பாதையை மீட்டுத்தர வேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அப்போது மலைவாழ் மக்கள், சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியர் ஒரு மாதத்தில், சுடுகாட்டு பாதையை மீட்டுதருவதாக உறுதியளித்தார். ஆனால் இது வரை இந்த சுடுகாட்டு பாைத ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உடல் அடக்கம்
இதனிடையே நேற்று முன்தினம் நொனங்கனூர் கிராமத்தில் 87 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பழைய சுடுகாட்டு சாலையில் கொண்டு சென்றனர்.
அங்கு பாதையை ஆக்கிரமித்து விவசாய பயிர் செய்யப்பட்டு இருந்ததால் அதுவரை அமரர் ஊர்தியில் எடுத்து செல்லப்பட்ட பிணத்தை, அதில் இருந்து இறக்கி அங்குள்ள வயல் வரப்பின் வழியாக உடலை தூக்கிச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த தகவலை அறிந்த, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்புரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டசெயலாளர் தனுசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வஞ்சி, வட்ட தலைவர் தீர்த்தகிரி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு சாலையை பார்வையிட்டனர். எனவே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.