12 மணி நேர வேலை மசோதா வாபஸ்; மே தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்படுவதாக மே தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-05-02 00:26 GMT

சென்னை,

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது.

12 மணி நேர வேலை மசோதா

வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா கடந்த மாதம் 21-ந்தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதனையடுத்து அமைச்சர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கடந்த 24-ந்தேதி ஆலோசனை நடத்தினர். அப்போது தி.மு.க. தொழிற்சங்கமாக தொ.மு.ச. உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த சட்டத்துக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதற்கிடையே சர்ச்சையை ஏற்படுத்திய 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினமே அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது அந்த மசோதா வாபஸ் பெறப்படுவதாக மே தின விழாவில் அவர் தெரிவித்து உள்ளார்.

மே தின விழா

உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அமைந்துள்ள நினைவு சின்னம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

மே தின நினைவு சின்னத்துக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர், மு.பெ.சாமிநாதன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி சோமு, சண்முகம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற மே தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட மாடல் அரசு

ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கைத் திட்டம்தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அதுதான் நம்முடைய அடித்தளம். இப்போது தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகி இருக்கிறது. அதை நான் சொல்லவில்லை என்று நீங்கள் யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். அதிலும் குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது.

தி.மு.க. தொழிற்சங்கமே எதிர்ப்பு

இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்ட திருத்தம் அல்ல. மிகமிக சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அதுவும் நிபந்தனைகளுடன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்தினுடைய திருத்தம். தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது.

தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் தி.மு.க.வினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். தி.மு.க., எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அவமானமாக கருதவில்லை

இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத்தினரையும் அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துகளைக் கேட்டு, உடனடியாக எந்தவித தயக்கம் இன்றி, துணிச்சலோடு அதை திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு.

விட்டுக்கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாக கருதியது இல்லை, அதை பெருமையாக கருதி கொண்டிருக்கக்கூடியவன். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் கருணாநிதி எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார். அதனால்தான் அதனை நிறுத்தி வைத்திருக்கிறோம்.

திரும்ப பெறப்படுகிறது

இதுகுறித்த தகவல் பேரவை செயலகத்திற்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு உள்ளது (வாபஸ்) குறித்த செய்தி பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும்.

எங்களை பொறுத்தவரையில் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் என்றைக்கும், யாரும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும், தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை. தொழிற்சங்கங்களை புரட்சியின் பள்ளிக் கூடங்கள் என்பார்கள். தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு, தொழிலாளர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான அனைத்து செயல்களையும் திராவிட மாடல் அரசு நிச்சயம் செய்து தரும் என்ற உறுதியை நான் தருகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்