குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

விராலிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-20 18:06 GMT

குடிநீர் பிரச்சினை

விராலிமலை தாலுகா, கொடிக்கால்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் குடிநீர் வராமல் இருந்துள்ளது.

இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதால் நிரந்தர தீர்வு காணும் படி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கொடிக்கால்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கான நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இன்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை- இலுப்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் விராலிமலை-இலுப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்