குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

ராதாபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-07-25 19:56 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா தெற்கு கருங்குளம் பஞ்சாயத்து சங்கனாபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம், கால்நடைகளை நம்பி உள்ளனர். சங்கனாபுரம் கிராமத்தில் கடந்த 3 மாதமாக குடிநீர் சரியாக வரவில்லை. 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இதனால் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணறுகளுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சங்கனாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் ருக்கு சத்தியா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது அதிகாரிகள் கூறுகையில், "சங்கனாபுரம் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போதுமான தண்ணீர் இல்லை. ஆகவே குடிநீர் வழங்குவதில் பிரச்சினை உள்ளது" என்றனர். அப்போது அதிகாரிகளிடம், பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்