நாகர்கோவிலில் பயங்கரவாதியுடன் தங்கி இருந்த நபர் யார்?

மங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு நாகர்கோவிலில் பயங்கரவாதி யாருடன் தங்கி இருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-23 18:45 GMT

நாகர்கோவில்:

மங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு நாகர்கோவிலில் பயங்கரவாதி யாருடன் தங்கி இருந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் பின் இருக்கையில் அமா்ந்து பயணம் செய்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவர் தான் இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்ததால் ஷாரிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே ஷாரிக் யாா் யாருடன் செல்போனில் பேசினார்? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஷாரிக் நாகர்கோவில் வந்தது தெரியவந்தது. அவர் 4 நாட்கள் வரை நாகர்கோவிலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இங்கிருந்து கேரளா சென்றுள்ளார்.

லாட்ஜூகளில் ஆய்வு

ஆனால் ஷாரிக் எதற்காக நாகர்கோவில் வந்தார்? அவா் யாருடன் தங்கி இருந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இங்கு தங்கியிருந்த போது யாரிடமும் அவர் செல்போன் மூலம் பேசவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி எனில் அவர் நாகர்கோவிலில் தங்கி இருந்தது எதற்காக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே நாகர்கோவிலில் ஷாரிக் தங்கி இருந்தபோது அவரை யாரேனும் நேரில் வந்து பார்த்தார்களா? குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் ஷாரிக்குக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் உளவுத்துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் ஆகஸ்டு மாத இறுதியில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜூகளில் யாரேனும் சந்தேகப்படும் படியாக தங்கி இருந்தார்களா? என ஆய்வு நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்