நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாககூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என்று சேலத்தில் நடந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
சேலம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என்று சேலத்தில் நடந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
செயற்குழு கூட்டம்
சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தி.மு.க.வினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க.வினர் தயாராக வேண்டும். அதற்கு முன்பாக நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தல் நமக்கு முக்கியம். அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தேர்தலின்போது நமக்கு எளிதாக வெற்றி கிடைக்கும்.
வெற்றி அவசியம்
கூட்டுறவு சங்க தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் கிராம மக்களுக்கு அதிக உதவிகளை செய்ய முடியும். இதன்மூலம் கிராமங்களில் நமக்கு ஓட்டு கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி அவசியம்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன.. அவ்வாறு இல்லாமல் நாம் நேர்மையாக பணியாற்ற வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தலில் தி.மு.க.வினர் அதிகளவில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம். அவ்வாறு கூட்டுறவு சங்கங்களில் வெற்றி பெறுவதன் மூலமாக விவசாயிகளுக்கு நாம் உதவிட முடியும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
கூட்டத்தில், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், மாநகர செயலாளர் ரகுபதி, கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.