ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை
மெலட்டூர் அருகே மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
மெலட்டூர்;
மெலட்டூர் அருகே மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்.
மதுக்கடை
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள நெய்தலூரில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுவிற்பனையை முடித்து விட்டு கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை மதுக்கடை பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் இருப்பதாக கடை ஊழியர்களுக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது மதுபான கடை பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கேட் மற்றும் ஷட்டர் திறந்த நிலையில் இருந்தது.
மதுபாட்டில்கள் கொள்ளை
இது குறித்து கடை ஊழியர்கள் மெலட்டூர் போலீசாருக்கும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மெலட்டூர் போலீசார், கடைக்குள் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் இருந்த பணம் வைக்ககூடிய லாக்கரை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளதும், லாக்கரை உடைக்க முடியாததால் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான உயர்ரக மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.இது குறித்த புகாரின் பேரில் மெலட்டூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.