தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை திட்டம்

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்தி செய்து ராமேசுவரம் தீவுக்கு வினியோகம் செய்ய ரூ.300 கோடியில், தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கப்படுகிறது.

Update: 2022-10-11 16:56 GMT

ராமேசுவரம், 

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்தி செய்து ராமேசுவரம் தீவுக்கு வினியோகம் செய்ய ரூ.300 கோடியில், தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைக்கப்படுகிறது.

கடலுக்குள் காற்றாலை

ராமநாதபுரம் மாவட்டத்தையொட்டி வங்கக்கடலில் ராமேசுவரம் தீவு அமைந்து இருக்கிறது. அந்த தீவின் உள்ளே ராமேசுவரம் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி உள்ளது. அங்குள்ள கடலானது, அழகும்-ஆக்ரோஷமும் நிறைந்தது. அந்த இடம் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

அனைத்து பருவக்காற்று சீசனிலும் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசும். எனவே மத்திய எரிசக்தி துறை சார்பில் தனுஷ்கோடி கடலுக்குள்ளும், கடற்கரை சாலையோரங்களிலும் காற்றாலைகள் அமைக்கலாமா? என்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அதிலும் அரிச்சல்முனை அருகே ராட்சத கோபுரம் அமைத்து காற்றின் வேகம் கணக்கிடப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இடம்தேர்வு

அதைத்தொடர்ந்து தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைய உள்ள இடத்தை மத்திய எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை மந்திரி பகவன்கூபா ஆய்வு செய்தார். தற்போது இத்திட்டத்துக்கான இடமாக கம்பிப்பாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றாலைகள் அமைய இருக்கின்றன.

இது பற்றி எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்தி முறையை பின்பற்ற வேண்டும் என மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அறிவுறுத்தினார். குறிப்பாக காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தும்படி கூறியுள்ளார். தற்போது அவரது சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின் உற்பத்திக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

டென்மார்க் அதிகாரிகள்

அதாவது ராமேசுவரம் தீவின் எல்லையான தனுஷ்கோடி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காற்றின் வேகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்த ஆய்வு சாதகமான முடிவை தந்திருப்பதால், தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து காற்றாலைகள் அமைக்கிறோம். விரைவில் டென்மார்க் அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்கு வர உள்ளனர்.

தனுஷ்கோடியில் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 5 இடங்களில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் ரூ.300 கோடி நிதியில் காற்றாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் மின்சார உற்பத்தியை பொறுத்து வருங்காலத்தில் கூடுதலாக கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கப்படும்.

மாசு இல்லா மின் உற்பத்தி தீவு

தனுஷ்கோடி கடல் பகுதியில் இரண்டு விதமான மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஒன்று கடலுக்குள் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, மற்றொன்று சோலார் (சூரியஒளி) மின்சார உற்பத்தி ஆகும். இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு முழுமையாக மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாசு இல்லாத மின்உற்பத்தி தீவாக ராமேசுவரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்