தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரி ரெங்கைய்யன் கூறினார்.

Update: 2023-06-11 20:44 GMT

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின்சார உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உள்கட்டமைப்பு வசதி உயர்வு

இதுகுறித்து இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரி ரெங்கைய்யன் கூறியதாவது:-

காற்றாலை மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பு 8 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது. தற்போது 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி அதிகரிப்பு

தற்போது கடந்த 1-ந்தேதியில் இருந்து 24 மணி நேரமும் காற்று வீசுகிறது. காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது என்று கூட கூறலாம். மின்சார உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கடந்த 1-ந்தேதியில் இருந்து சராசரியாக 102 மில்லியன் யூனிட்டில் இருந்து 107 மில்லியன் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி காற்றாலைகள் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான். இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் வருகிற செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் தற்போது அதிகரிக்கும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்