3 நிறுவனங்களுக்கு மீண்டும் பாமாயில், பருப்பு வழங்க ஆர்டர் கொடுப்பதா? தமிழக அரசு மீது அண்ணாமலை பாய்ச்சல்
தரமற்ற பொருட்களை சப்ளை செய்ததாக ரூ.2½ கோடி அபராதம் விதிக்கப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மீண்டும் பாமாயில், பருப்பு வழங்க ஆர்டர் கொடுப்பதா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
ரூ.1,000 மதிப்புள்ள பொங்கல் பரிசை தருவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் மக்களுக்கு கிடைத்ததோ தரங்கெட்ட பொருட்கள். பல இடங்களில் மக்கள் அதை வாங்க மறுத்தனர். வாங்கிய சிலர் குப்பைகளில் வீசும் அளவுக்கு மோசமான பொருட்களை தமிழக அரசு வழங்கியது.
ஆனால், அந்த பழியினை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது சுமத்தி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம், அவர்களை 'பிளாக் லிஸ்ட்' செய்வோம், என்றெல்லாம் அறிக்கை தயாரித்தனர்.
தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ரூ.1,000 மதிப்புள்ள பரிசில், ஒரு குடும்பத்திற்கு ரூ.100 இழப்பு என்றாலும், கிட்டத்தட்ட ரூ.210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.
இதுவெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். அப்படி, தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவுக்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் 'பிளாக் லிஸ்ட்' தடைசெய்யவில்லை.
மீண்டும் ஆர்டர் கொடுப்பதா?
அந்த 6 நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.2½ கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது.
தரமற்ற பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏன்?.
தவறு செய்தவர்களுக்கு தண்டனைக்கு பதில் வெகுமதிகள் தருவது தான் திராவிட மாடலா?.
தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்துக்கு தண்டனை தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.