"அமைச்சராக மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் எழுதிக் கொடுப்பாரா?" - சீமான் கேள்வி
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் ஆவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
எனக்கு அமைச்சர் பொறுப்பு கேட்டு தலைமைக்கு தர்மசங்கடத்தை உண்டாக்க வேண்டாம் என்று தி.மு.க.வினருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களின் வீடுகளின் முன்பாக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால், ஊரடங்கு காலத்தில் அரசு உத்தரவை மீறி ஆட்களை கூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
''திமுக அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராடியதற்காக அதிமுக ஆட்சியில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு கொரோனா காலகட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார். ஆனால், எங்களை மட்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.
உதயநிதி ஸ்டாலின் மீதும் கொரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டன. அவர் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்வதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். நீங்க கிள்ளுகிற மாதிரி கிள்ளுங்க, நான் அழுகிற மாதிரி அழுகிறேன்.. என்ற கதை தான். ஆனால் உதயநிதியை உறுதியாக அமைச்சர் ஆக்குவார்கள்.. 5 ஆண்டு காலத்தில் அமைச்சராகவே மாட்டேன் என்று உதயநிதி உறுதி கூறுவாரா..? மற்றவரக்ளை பேச வைக்கும் போது, எல்லோரும் விரும்புகிறார்கள், எல்லோரும் கேட்கிறார்கள் என்று கூறும் போது, உதயநிதிக்கு ஆதரவு இருக்கு எதிர்ப்பு இல்லை என சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.." என்று தெரிவித்தார்..