ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

மேலநாகூர் அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-04-07 18:45 GMT

நாகூர்:

மேலநாகூர் அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அடிக்கடி நடக்கும் விபத்துகள்

நாகை மாவட்டம் மேலநாகூரை அடுத்த வைரவன் இருப்பில் இருந்து நாகூர் கிழக்கு கடற்கரை சாலை, பாலக்காடு, பெருங்கடம்பனூர், ஆழியூர் வழியாக திருவாரூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வைரவன் இருப்பில் முக்கிய சாலையில் கோவில் மற்றும் குளத்தின் அருகில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இந்த வளைவு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதன் காரணமாக இந்த வளைவில் அடிக்கடி விபத்து நடக்கிறது.

பொதுமக்கள் அச்சம்

அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குழந்தைகள் சாலையோரத்தில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் விபத்துகள் அடிக்கடி நடப்பதாலும், ஆபத்தான வளைவில் வாகனங்கள் வேகமாக வருவதாலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் வருவதால் வளைவு பகுதியில் கோர விபத்துகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் வாகனங்கள் வேகமாக வருவதை கட்டுப்படுத்துவதற்கு வேகத்தடை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள். எனவே இந்த பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்