நாட்டார் கால்வாய்க்கு இந்தாண்டாவது தண்ணீர் திறக்கப்படுமா?

மானாமதுரை அருகே நாட்டார் கால்வாய்க்கு இந்தாண்டாவது தண்ணீர் திறக்கப்படுமா என அப்பகுதியை சேர்ந்த 16 கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-11-03 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை அருகே நாட்டார் கால்வாய்க்கு இந்தாண்டாவது தண்ணீர் திறக்கப்படுமா என அப்பகுதியை சேர்ந்த 16 கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டார் கால்வாய்

மானாமதுரை அருகே உள்ள ஆர்.புதூர், அன்னவாசல், கிளங்காட்டூர், கரிசல்குளம், அரிமண்டபம் உள்பட 16 கிராமங்கள் வானம்பார்த்த கிராமங்களாக உள்ளன. இந்த பகுதியில் நன்றாக மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருங்காக்கோட்டையில் உள்ள வைகையாற்றில் இருந்து நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய் மூலம் சுற்றியுள்ள 18 பெரிய கண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறுகிறது. இதன் மூலம் மொத்தம் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

பலத்த மழை

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் சொந்தமாக ரூ.3 லட்சம் செலவில் கால்வாயை சீரமைத்து தூர்வாரினர். அதன்பின்னர் கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ரூ.3 கோடி செலவில் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில் இதுவரை கால்வாய்க்கு வைகையாற்றில் இருந்த தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும் இங்குள்ள ஒரு சில கண்மாய் மட்டும் நிரம்பி உள்ள நிலையில் பல்வேறு கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக வைகையணை நிரம்பி வரும் நிலையில், இந்தாண்டாவாது நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் திறக்கப்படுமா?

இதுகுறித்து நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி கூறியதாவது:- வைகையாற்றில் தற்போது 2 முறை வெள்ளம் கரைபுரண்டோடி வைகையாற்றில் சென்ற தண்ணீர் எல்லாம் கடலில் வீணாக போய் கலந்த நிலையில் நாட்டார் கால்வாய்க்கு அந்த தண்ணீரை திருப்பிவிட அதிகாரிகளுக்கு மனம் இல்லை. விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கூட அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

இந்த பகுதியில் உள்ள 16 கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடன் உள்ளதால் விவசாயிகள் கண்மாய் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கால்வாயில் வைகை தண்ணீர் வந்தது இல்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலரும் விவசாயத்தை கைவிட்டு வேறு பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் வைகையணை நிரம்பி வருகிறது. இதனால் வைகையாற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அச்சமயத்திலாவது நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்