வெள்ளாற்று வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
வெள்ளாற்று வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மருதையாறு, சின்னாறு, கல்லாறு, கோனேரி ஆறு, வெள்ளாறு, ஆனைவாரி ஓடை என்ற சங்கு நதி உள்ளிட்ட ஆறுகள், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வளம் சேர்க்கும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய நீர்நிலைகளாகும். இதில் வெள்ளாறானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கங்களுள் ஒன்றான சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்குள் பாய்ந்து, பரங்கிப்பேட்டை அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கல்லாறு, சுவேத நதி, சின்னாறு, ஆனைவாரி ஓடை, மணிமுத்தாறு உள்ளிட்ட நீர்நிலைகள் இதன் துணை ஆறுகள் ஆகும். இதில் கல்லாறு, சின்னாறு, ஆனைவாரி ஓடை உள்ளிட்டவை பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் நீர்நிலைகளாகும். இந்த மாவட்டத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் உள்ளன. அதில் குன்னம் தாலுகாவில் அத்தியூர், கிழுமத்தூர், கிழுமத்தூர் குடிக்காடு, கைப்பெரம்பலூர், வயலூர் ஆகிய ஊர்களில் உள்ள பாசன ஏரிகளின் முக்கிய நீராதாரமாக வெள்ளாறு விளங்குகிறது. இந்த ஏரிகளை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது
வெள்ளாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்க ஆங்கிலேயர் காலத்தில் வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஆற்று நீரை தேக்கி வைத்து மழைக்காலத்திற்கு பிறகும் இந்த ஏரிகளுக்கு திருப்புவதற்கு ஏதுவாக கீழக்குடிக்காடு கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 2016-17-ம் ஆண்டில் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால் சிறிது தூரம் ஆற்றையொட்டியே செல்கிறது.
சமீபத்தில், இந்த வாய்க்காலின் தடுப்புச்சுவரில் உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறும் நீரானது மீண்டும் ஆற்றுக்கே செல்கிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. அதே நேரத்தில் விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும் வாய்க்காலின் பல இடங்களில் சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே உடைப்பு ஏற்பட்ட வாய்க்காலை சீரமைக்க உரிய நிதி ஒதுக்கி, வருகிற கோடை காலத்திற்குள் ஏரிகளை முறையாக பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு;-
தடுப்புச்சுவரை புதுப்பிக்க வேண்டும்
அத்தியூர் குடிக்காட்டை சேர்ந்த விவசாயி பெரியசாமி:- அத்தியூர், கிழுமத்தூர், கைப்பெரம்பலூர், வயலூர் உள்ளிட்ட 4 பாசன ஏரிகளுக்கும் மழைக்காலங்களில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வாய்க்கால்கள், ஓடைகள் வழியாக மழை நீர் வந்து சேர்கிறது. ஆனாலும் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் வாய்க்கால் வழியாக நீர் வந்து சேர்ந்தால்தான் பாசன ஏரிகள் நிரம்பும். கால்நடைகளுக்கு தேவையான நீர் இருப்பதோடு, விவசாய பணிகளும் நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை அருகே உள்ள வாய்க்கால் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே தடுப்புச்சுவரில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, அதன் நீரானது மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை ஏற்பட்டது. மணல் மூட்டைகள் மற்றும் மண் கொண்டு அந்த உடைப்புகள் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அந்த வாய்க்கால் சுற்றுச்சுவரின் வேறொரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு அந்த நீர் மீண்டும் ஆற்றுக்கே செல்கிறது. இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் நீரின் அளவு குறைந்து விவசாயத்தையும், கால்நடைகளுக்கான நீராதாரத்தையும் பாதிக்கிறது. இந்த வாய்க்காலின் சுற்றுச்சுவர் உடைப்புகள் பற்றியும் சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பல மனுக்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி நிதி ஒதுக்கி அடுத்த மழைக்காலத்திற்குள் தடுப்புச்சுவரைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வாரி பராமரிக்க வேண்டும்
வயலூரை சேர்ந்த அரவிந்த்:- வெள்ளாற்று நீரை அத்தியூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு கொண்டு சேர்க்கும் வாய்க்கால்கள், நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்று முதியவர்கள் கூறுகின்றனர். இந்த வெள்ளாறு மற்றும் வாய்க்கால்கள், ஏரிகள் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. சுமார் 6 கி.மீ. நீளமுள்ள இந்த வாய்க்கால் ஆரம்பத்தில் ஒரு வாய்க்காலாக ஆரம்பித்து சிறிது தூரம் சென்ற பின்னர் அத்தியூருக்கு ஒரு வாய்க்காலாகவும் மற்றும் இதர மூன்று ஏரிகளுக்கும் ஒரு வாய்க்காலாகவும் என இரண்டாக பிரிகிறது. ஒகளூர் கிராமத்தில் இந்த வாய்க்கால்கள் பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளதால் இரு வாய்காலிலும் செல்ல வேண்டிய நீர் ஒரு வாய்க்காலிலேயே அதிக அளவு செல்வதை தடுக்கவும், உடைப்பை சரிசெய்யவும் அவ்வப்போது மணல் மூட்டைகளை பெரும் சிரமத்துடன் வைக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோல வயலூர் ஏரிக்கு வரவேண்டிய தண்ணீரும் கைப்பெரம்பலூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் இடத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் வயலூர் ஏரிக்கு பெருமளவு தண்ணீர் வராத நிலையே பல வருடமாக இருக்கிறது. இத்தகைய பாதிப்புகளை விரைந்து சீர்செய்ய வேண்டும். மேலும் அத்தியூர், கிழுமத்தூர், கிழுமத்தூர் குடிக்காடு, கைப்பெரம்பலூர், வயலூர் வரை அனைத்து இடங்களிலும் இந்த வாய்க்கால்களை முறையாக தூர்வாரி கோடைக்குள் பராமரிக்க வேண்டும்.