பொன்மலை ஜி-கார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு

தொடரும் விபத்துகளை தடுக்க பொன்மலை ஜி-கார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-03 19:19 GMT

தொடரும் விபத்துகளை தடுக்க பொன்மலை ஜி-கார்னரில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்துள்ளனர்.

பொன்மலை ஜி-கார்னர்

மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாநகரில் உள்ள பொன்மலை ஜி கார்னர் முக்கியமான பகுதியாகும். இந்த இடத்திலிருந்துதான் பொன்மலை ரெயில்வே பணிமனை சாலை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாநகருக்குள் செல்லும் சாலை ஆகியவை பிரிகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு போக்குவரத்து தொடங்கியது.

இதில் ஜி-கார்னர் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் நெடுஞ்சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டதால், டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து பொன்மலைக்கு செல்வதற்கான பாதை தடைப்பட்டுள்ளது. இதனால், டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து பொன்மலை ரெயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள், பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், அம்பிகாபுரம், நத்தமாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், வாரச் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஜி-கார்னர் மைதானம் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் பாதிப்பு

மாற்றுப்பாதை இல்லாததால் பொன்மலை ரெயில்வே பணிமனை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி கிராமமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலத்தில் சுற்றிச் செல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்தப் பகுதியில் சுமார் ஒருலட்சம் மக்கள் வசித்து வருவதாகவும், பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலத்தின் கீழே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்றும் ரெயில்வே தொழிலாளர்கள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே பொதுமக்கள் வசதிக்காக உடனடியாக பொன்மலை ஜி-கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் இடையில் அணுகு சாலை அமைத்துத்தருவது என்று முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.

தொடரும் விபத்துகள்

தற்போது இந்த அணுகு சாலை இருவழிச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானநிலையம் மற்றும் திருச்சி மாநகருக்கு வரும் வாகனங்கள் இருவழிச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றன. பொன்மலை ரெயில்வே ஊழியர்களும், அதை சுற்றி உள்ள கிராம மக்களும் இதைதான் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக அணுகு சாலை என்பது ஒரு வழிப்பாதையாக மட்டுமே இருக்கும். யாராவது விதிமீறி வருவார்கள்.

ஆனால் இந்த அணுகு சாலை இருவழிச்சாலை என்பதால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இருவழிச்சாலை என்பது பெரும்பாலும் தெரியாததால் அவர்கள் அணுகு சாலையில் அதிவேகமாக வருகிறார்கள். இதனால் அந்த அணுகு சாலையில் பொதுமக்களும், பொன்மலை ரெயில்வே ஊழியர்களும் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம், அந்த அணுகு சாலை குறுகலாக இருப்பதாலும், எதிரே வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதாலும் அடிக்கடி விபத்து நிகழ்ந்து சிலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுரங்கப்பாதை

எனவே, இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருவழித்தடங்களையும் இணைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க தொடக்கத்தில், ரூ.1 கோடி மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தபோதே ரெயில்வே நிர்வாகம் சரியான பதிலை கூறவில்லை என்று கூறிதான் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டன.

ஆனால், தற்போது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமானால் பல கோடி ரூபாய் செலவாகும் நிலை உள்ளது. அத்துடன், அதற்கு தேவையான நிலத்தையும் ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், காவல் துறையினர் பலமுறை ஆய்வுகளை மேற்கொண்டும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் ஜி-கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்பில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் கூறியுள்ளனர். இதன்காரணமாக, இந்த சாலையில் சுரங்கப்பாதை கோரிக்கை நிறைவேறாத கோரிக்கையாகவே உள்ளது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

உயிருக்கு உத்தரவாதம் இல்லை

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சூசைராஜ்:- பொன்மலையில் இருந்து டி.வி.எஸ்.டோல்கேட் பகுதிக்கு அடிக்கடி சவாரி சென்றுவருகிறேன். ஜி-கார்னர் அணுகு சாலையில் செல்பவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. குறிப்பாக ஒரு மாதத்துக்கு முன்பாக கூட இந்த சாலையில் 2 ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. கடந்த வாரம் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஒருவர் தனது இருகால்களையும் இழந்துவிட்டார். எனவே, இப்பகுதியில் வாகனங்களில் சென்றுவரும், மக்களின் உயிரை பாதுகாக்க தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 ஊழியர்கள் பலி

பாலக்கரையை சேர்ந்த பொன்மலை ரெயில்வே பணிமனை ஊழியர் டேனியல்:- நான் கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணிமனையில் வேலை செய்து வருகிறேன். நான் தினமும் வீட்டில் இருந்து அணுகு சாலை வழியாகத்தான் வேலைக்கு வந்து செல்கிறேன். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு இந்த சாலை இருவழிசாலை என்பது தெரிவதில்லை. இதனால் அவர்கள் இருவழியையும் அடைத்துக்கொண்டு வருகிறார்கள். தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயந்து, பயந்து தான் அந்த சாலையில் சென்றுவருகிறேன். சமீபத்தில் எங்கள் பணிமனை ஊழியர்கள் 4 பேர் விபத்தில் சிக்கியதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோதே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று ரெயில்வே தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அப்போது ரெயில்வே நிர்வாகம் போதிய இடம் வழங்கவில்லை எனக் கூறி அதை செய்யாமல் விட்டுவிட்டனர். இதன் காரணமாக தினந்தோறும் இந்த சாலையில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே பொன்மலை ஜி-கார்னரில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும்.

போக்குவரத்து போலீசார்

மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபாவதி:- இப்பகுதியில் நாள்தோறும் விபத்துகள் நடந்து வருகின்றன. அரசுக்கும் இதுவரை பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனாலும் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதே போல் அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசாரும் பணியில் ஈடுபடுவதில்லை. விபத்து நடக்கும் போது மட்டுமே போக்குவரத்து போலீசார் வருகின்றனர். அதன் பிறகு வருவதில்லை. எனவே விபத்தை தடுக்க டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து பொன்மலைக்கு செல்வதற்கு ஜி-கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்பில்லை

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, "ஜி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சாலை, மற்றொரு சாலையைவிட ஏறத்தாழ 2.7 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இந்த இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்பு இல்லை. இதன் காரணமாகவே பொன்மலை- டி.வி.எஸ்.டோல்கேட் அணுகு சாலை 8.75 மீட்டர் அகலத்தில் அப்போது அமைக்கப்பட்டது. இருப்பினும் வேறு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்