கோத்தகிரியில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுமா?
கோத்தகிரியில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுமா? என உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுமா? என உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சுற்றுலா தலங்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சுவிட்சர்லாந்து நாட்டில் நிலவும் சீதோஷ்ண காலநிலை நிலவுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை விவசாயத்தையே நம்பி உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பச்சை தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் சிலர் மலைக்காய்கறிகள் விவசாயத்துக்கு மாறினர். மேலும் சிலர் சுற்றுலா பயணிகள் வருகையை நம்பி வியாபாரத்தில் களமிறங்கி விட்டனர். இருப்பினும், கோத்தகிரி நேரு பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்ளிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஜான் சல்லிவன் நினைவகம் மற்றும் பூங்கா, லாங்வுட் சோலை, ரங்கசாமி மலை, உயிலட்டி நீர்வீழ்ச்சி, சுண்டட்டி நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேம்படுத்த வேண்டும்
இந்த சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது. கோத்தகிரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தினால், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோத்தகிரி மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது, சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
வரைபடத்தில் இல்லை
கோத்தகிரி மூணுரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த் ராமு:-
சுற்றுலா தலங்களை காண வரும் பயணிகளுக்கு தெரியும் வகையில் மலைப்பாதை தொடங்கும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சுற்றுலா தலங்கள் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும், செல்ல வேண்டிய தூரம் மற்றும் வழிகள் குறித்தும் தகவல் பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் சுற்றுலா துறை சார்பில் வைக்கப்பட வேண்டும். இந்த விதத்தில் ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அளிக்கப்படுவது இல்லை. இதனால் இங்குள்ள சுற்றுலா தலங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கு காரணம், இங்குள்ள பல சுற்றுலா தலங்களை பலரும் அறியாமல் உள்ளதுதான். இங்கு நேரு பூங்கா, ஜான் சல்லிவன் நினைவகம் மற்றும் பூங்கா, கோடநாடு காட்சி முனை, லாங்வுட் சோலை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, ரங்கசாமி மலை மற்றும் உயிலட்டி நீர்வீழ்ச்சி, சுண்டட்டி நீர்வீழ்ச்சி ஆகிய சிறந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் பல சுற்றுலா தலங்கள் சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறவில்லை. எனவே, அறியப்படாத சுற்றுலா தலங்களையும் மேம்படுத்தி வரைபடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகன நிறுத்துமிடம்
கோத்தகிரியை சேர்ந்த விவேகானந்தன்:-
கோத்தகிரியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலானவை பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொருட்களை வாங்க வரும் சுற்றுலா பயணிகள் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். இதை செய்தால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அறியப்படாத சுற்றுலா தலங்களில் கழிப்பறை, குடிநீர், வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அருண் பெள்ளி (கோத்தகிரி):-
கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், பிரபலப்படுத்தவும் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இல்லையென்றால் இதே நிலை தான் நீடிக்கும். இதனால் பொருளாதாரத்தில் கோத்தகிரி பகுதி பின்தங்கிவிடும். எனவே, உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
பொருளாதார முன்னேற்றம்
கோத்தகிரி வடிவேல்:-
கோத்தகிரி பகுதியில் ஏராளமான சுற்றுலா வாடகை வாகனங்கள் உள்ளன. இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் பிரபலம் அடையாததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. இதனால் சவாரி கிடைப்பது இல்லை. எனவே, சுற்றுலா தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா வாகன தொழில் மேம்படும். மேலும் மலைக்காய்கறிகள், பேக்கரி வகைகள், ஹோம் மேட் சாக்லேட் வகைகள், கம்பளி ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனால் அந்த வியாபாரிகளும் பயனடைவதுடன், தங்கும் விடுதிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இதனால் கோத்தகிரி பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.