கோழிப்பாலத்தில் பெயர்ந்த சாலை சீரமைக்கப்படுமா?

கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் பெயர்ந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-03-15 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் பெயர்ந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சாலை பெயர்ந்தது

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆண்டுதோறும் மழை காலத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலையோரம் மண் சரிவு ஏற்படுகிறது. தொடர்ந்து பாலங்கள், சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோழிப்பாலம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த கனமழையில் சிமெண்டு சாலையோரம் பல இடங்கள் பெயர்ந்து விழுந்தன. தொடர்ந்து தடுப்புச்சுவர்களும் கட்டாததால் பொதுமக்களின் வீடுகள் மீது மண் சரிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் சிமெண்டு சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஓட்டிச் செல்ல முடிகிறது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாததால், அவசர காலங்களில் நோயாளிகள் கர்ப்பிணிகளை கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. இந்த சமயத்தில் அவர்களை தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

இதனால் பழுதடைந்த சிமெண்டு சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இன்னும் 2 மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. தொடர்ந்து மழைக்காலம் என்பதால் பெயர்ந்த சாலையை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக சிமெண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்