வடமலைக்குறிச்சி விலக்கில் சேவை ரோடு அமைக்கப்படுமா?

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி விலக்கில் சேவை ரோடு அமைக்க தேசிய நெஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-05-22 19:35 GMT

விருதுநகர், 

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி விலக்கில் சேவை ரோடு அமைக்க தேசிய நெஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேவை ரோடு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை-நாகர்கோவில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின்போது விருதுநகரில் சத்திரரெட்டியபட்டி விலக்கிலிருந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை சேவைரோடு அமைக்காமல் தவிர்த்து விட்டது. இந்நிலையில் விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் மேற்கு பாண்டியன் காலனி முதல் வடமலைக்குறிச்சி விலக்கு வரை சேவைரோடு இல்லாததால் விபத்துக்கள் ஏற்படும் நிலை தொடர்கிறது.

விருதுநகரின் மேற்கு பகுதியில் உள்ள செங்குன்றாபுரம், எரிச்சநத்தம், குண்டலப்பட்டி, சீனியாபுரம், பாவாலி, எல்கைப்பட்டி, சந்திரகிரி புரம், வடமலைக்குறிச்சி, மீனாட்சிபுரம், சிவஞானபுரம், பாப்பாக்குடி, சின்னமூப்பன்பட்டி, கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் விருதுநகருக்கு வருவதற்கு நான்கு வழிச் சாலையை கடந்து வர முடியாமல் சுற்றி வர வேண்டியுள்ளது.

புகார் மனு

வடமலைக்குறிச்சி விலக்கு பகுதியில் சேவை ரோடு அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து வந்த புகார் மனுக்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடந்த 10-ந் தேதி எழுதிய கடிதத்தில் வடமலைக்குறிச்சி விலக்கில் முழுமையாக சேவைரோடு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சேவை ரோடுகள் அமைத்துள்ள நிலையில் விருதுநகரில் மட்டும் வடமலைக்குறிச்சி விலக்கில் சேவை ரோடு அமைக்க தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக மத்தியசாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

ஒப்புதல்

தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வடமலைக்குறிச்சி விலக்கு பகுதியில் புறவழி சாலையில் இருபுறமும் 300 மீ சேவை ரோடு அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒப்புதல் வந்தவுடன் திட்டப் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பணி எப்போது தொடங்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கவில்லை.

எனவே நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் வடமலைக்குறிச்சி விலக்கு ரோட்டில் சேவை ரோடு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்