போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.21 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.21 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-12 18:09 GMT

போக்குவரத்து நெரிசல்

கரூர் நகரில் டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை உற்பத்தி, பஸ்பாடி கட்டுதல் உள்ளிட்ட தொழில்கள் சிறப்புற்று விளங்குகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிமாவட்டங்களில் இருந்தும் நாள் தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான ஏற்றுமதி நிறுவனங்களான டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் கோவை ரோடு, வையாபுரி நகர், செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட சாலை

இதனையடுத்து கரூர் நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கரூர் ெரயில் நிலையத்தில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் பலர் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி கரூர் ெரயில் நிலையத்தில் இருந்து சேலம் தேசியநெடுஞ்சாலை வரை ரூ.21 கோடி செலவில் அம்மாசாலை அமைக்கும் பணி கடந்த 201-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

இந்தசாலை 40 அடி அகலத்தில் 2.6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு அச்சாலையில் மேலும் 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாதிசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பகுதியில் சாலை அமைக்காமல் பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோரிக்கை

இப்பணி நிறைவுபெறும் போது செங்குந்தபுரம் மற்றும் வையாபுரி நகர், ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு வரும் இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை பைபாஸ் சாலையில் இருந்து நேரடியாக செல்லமுடியும்.

மேலும், வெங்கமேடு, வாங்கப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் நகருக்கு வேலைக்கு வருபவர்கள் இச்சாலையை பயன்படுத்துவதால் கோவை ரோடு, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே பாதியில் நிறுத்தப்பட்ட இந்த சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்