அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்கப்படுமா?-வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சாலை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
உயர்மட்ட மேம்பாலம்
அரியலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து, பாலத்தின் இருபுறமும், ரெயில் நிலையத்திற்கும், மருத்துவமனைக்கும் செல்வதற்கான சாலைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தநிலையில், அப்பகுதி மக்கள் தாங்கள் கொடுத்த நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனால் அந்த பணிகள் அப்படியே நின்று போனது.
தற்காலிக சாலை
இதற்கிடையே ஆட்சி மாற்றம் நடைபெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் சாலை அமைப்பதற்கான எந்தப்பணிகளும் தொடங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். மேலும், பாலத்தின் இடதுபுறம் எரிவாயு விற்பனை நிலையம் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் இருப்பதால் வாகனங்கள் வந்து செல்வதில் பல்வேறு சிரமம் ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து வணிகர்கள் ஒன்று சேர்ந்து ரூ.2 லட்சம் செலவில் ஜல்லிக்கற்களை கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்து உள்ளனர். தற்போது இந்த சாலையை பயன்படுத்தி ரெயில் நிலையத்திற்கு செல்பவர்கள் ஆட்டோ மற்றும் கார்களில் விரைந்து சென்று வருகின்றனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் கலந்துபேசி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு தொகையை விரைவில் வழங்கி பாலத்தின் இருபுறமும் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்றும், ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் சாலை அமையும் இடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.