மாநகராட்சி குப்பை கிடங்கில் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

வாங்கல் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-02-25 18:39 GMT

மாநகராட்சி குப்பை கிடங்கு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் நாள்தோறும் சேகரிக்கப்படும். பின்னர் அந்த குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று வாங்கல் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் கொட்டுவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு, குப்பை கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அவற்றை மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து அவற்றை அரைத்து உரம் தயாரிக்கும் செயலுக்கு பயன்படுத்தி வந்தனர்.

சுற்றுச்சுவர் அமைப்பு

இருப்பினும் அங்குள்ள குப்பை கிடங்குகளில் கோடை காலங்களில் வெயில் அதிகம் இருக்கும் சமயத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவது வாடிக்கையாக நடைபெறும் செயலாக இருக்கும். இவ்வாறு குப்பைகள் எரிக்கும் போதும், தானாக தீப்பிடித்து எரியும் போதும் அங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சென்று சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தும் வந்தனர்.

இந்நிலையில் குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதன் மேல் தகரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காற்று பலமாக வீசும் காலங்களில் அங்கு இருக்கும் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

கோரிக்கை

அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பலமான காற்று வீசுவதால் தற்போது அந்த தகர சீட்டுகள் சாய்ந்து உள்ளன. இதனால் காற்று பலமாக வீசும் போது குப்பைகள் காற்றின் மூலம் அடித்துச் சென்று சாலைகளில் குப்பைகள் விழும் நிலை உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த தடுப்புகளை அகற்றி புதிய சீட்டுகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்