ஊட்டியில் புதுப்பிக்கப்பட்ட 'டேவிஸ்டேல்' பூங்கா பயன்பாட்டுக்கு வருமா?-சிறுவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஊட்டியில் புதுப்பிக்கப்பட்ட டேவிஸ்டேல் பூங்கா பயன்பாட்டுக்கு வருமா? என்று சிறுவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-25 00:45 GMT

ஊட்டி

ஊட்டியில் புதுப்பிக்கப்பட்ட டேவிஸ்டேல் பூங்கா பயன்பாட்டுக்கு வருமா? என்று சிறுவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பூங்காக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா பூங்கா உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மேற்கண்ட பூங்காக்களுக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் உள்ளூர் பொதுமக்களும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட ஒரு சில பூங்காக்களுக்குள் காலையில் நடை பயிற்சிக்கு செல்கின்றனர். ஆனால் இது போன்ற பெரிய பூங்காக்கள் நடை பயிற்சிக்கு செல்ல மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

எனவே பொதுமக்கள் அந்தந்த பகுதியில் நடைபயிற்சி செல்வதற்கும், குழந்தைகள் பொழுது போக்குவதற்கும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதேபோல் ஊட்டி கலெக்டர் அலுவலகம் பகுதியில் டேவிஸ்டேல் பூங்கா அமைந்து உள்ளது.

ரூ.90 லட்சத்தில் சீரமைப்பு

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.90 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. தற்போது இங்கு ஊஞ்சல், குழந்தைகள் சறுக்கி விளையாடும் உபகரணங்கள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு பளிச்சென்று காட்சி தருகிறது.

இந்த நிலையில் பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அந்த பூங்கா தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் சென்று பொழுதுபோக்க ஆசையாக வரும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், சிறுவர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சில பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டும் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே சென்று பொழுது போக்கிவிட்டு வெளியே வருகின்றனர். எனவே இந்த பூங்காவை பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்