மல்லூர் பகுதியில்ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மல்லூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-30 21:40 GMT

பனமரத்துப்பட்டி, 

ரெயில் பாதை

சேலம் மாநகரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டி பகுதியில் சேலம்-கரூர் ரெயில் வழித்தட தண்டவாளம் உள்ளது.

இந்த ரெயில் பாதையின் வழியாக வாழக்குட்டப்பட்டி, மூக்குத்திபாளையம், ஏர்வாடி வாணியம்பாடி, கொமாரபாளையம், பாலம்பட்டி, வேங்காம்பட்டி, பொன்பரப்பிபட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மல்லூர் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் வருகிறார்கள். பின்னர் அங்கிருந்து சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேம்பாலம்

இதேபோல் மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் வேங்காம்பட்டியில் உள்ள ரெயில் பாதையை ரெயில்வே கேட் வழியாக கடக்க வேண்டி உள்ளது.

பல நேரங்களில் ரெயில்கள் செல்வதற்காக ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வேங்காம்பட்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி கூறிய கருத்துகளை காண்போம்.

மாணவர்கள் அவதி

வாழக்குட்டப்பட்டியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி:-

எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சேலம், மல்லூர், ராசிபுரம் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேங்காம்பட்டி ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் விவசாயிகள் உரிய நேரத்திற்கு மார்க்கெட்டிற்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் காலை நேரங்களில் அலுவலகத்திற்கும், பள்ளிகளுக்கும் செல்வோரும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு செல்லும் காலங்களில் திடீரென ெரயில்வே கேட் மூடப்படுவதால் தேர்வுக்கு உரிய நேரத்திற்கு போக முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

வாகனங்கள் அணிவகுப்பு

ஏர்வாடி வாணியம்பாடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுகதீஸ்வரன்:-

மல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ெரயில் பாதை வழியாக பயணிகள் ெரயிலை விட சரக்கு ரெயில் அதிகளவில் செல்வதால் எந்த நேரத்தில் ெரயில்வே கேட் மூடப்படும் என்பது தெரியாமல் போகிறது. இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதால், இந்த பாதையை நாள்தோறும் பயன்படுத்தும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பல நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சில நேரங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பள்ளி, கல்லூரி பஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நின்று விடுகின்றன.

பூக்களுக்கு உரிய விலை

வாழக்குட்டப்பட்டியை சேர்ந்த முருகன்:-

எங்கள் பகுதியில் மல்லிகைப்பூ உற்பத்தியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். காலை நேரங்களில் மல்லிகை பூக்கள் செடியில் இருந்து பறிக்கப்பட்டு விரைவாக மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு சீக்கிரமாக கொண்டு சென்றால் தான் பூக்களுக்கு அதிக விலை கிடைக்கும். ஆனால் விவசாயிகள் மார்க்கெட்டிற்கு செல்லும் நேரங்களில் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் திடீரென மூடப்படுவதால் விவசாயிகளால் மார்க்கெட்டிற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. மேலும் இந்த பகுதியில் இருந்து நிறைய கூலித்தொழிலாளர்கள் சேலம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெண்கள் கார்மெண்ட்ஸ் வேலைக்கும் செல்கின்றனர். அவர்கள் உரிய நேரத்திற்கு சென்றால் தான் மல்லூரில் பஸ்சை பிடித்து வேலைக்கு செல்ல முடியும். ஆனால் அவர்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் திடீரென ெரயில்வே கேட் மூடப்படுவதால் அவர்களால் மல்லூர் சென்று பஸ்சை பிடிக்க முடியாமல் போகிறது.

பேரூராட்சி தீர்மானம்

மல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வேங்கை அய்யனார்:-

வேங்காம்பட்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். மேம்பாலம் அமைக்க கோரி சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ெரயில்வே அமைச்சகத்திற்கும், மத்திய அரசிற்கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். வேங்காம்பட்டியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்