புதிய பஸ்நிலையம் செயல்படுவதற்கான நடவடிக்கை விரைவுப்படுத்தப்படுமா?

விருதுநகர் புதிய பஸ் நிலையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-09 19:02 GMT

விருதுநகர், 

விருதுநகர் புதிய பஸ் நிலையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையம்

விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்த பஸ் நிலையம் முழுமையாக செயல்படாமல் முடங்கிய நிலையில் உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த பஸ்நிலையத்தை நகரின் வடக்கு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றத்தால் இந்த நடவடிக்கை கைகூடவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் இந்த பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை.

அறிவுறுத்தல்

இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பொறுப்பேற்றவுடன் இந்த புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த இருமுறை ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.

அதிலும் கடந்த மாதம் நடத்திய ஆய்வு கூட்டத்தின் போது மாத இறுதிக்குள் போக்குவரத்து கழகம் மற்றும் போலீசார் தனியார் பஸ் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து புதிய பஸ்நிலையத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வரைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து பஸ் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். அமைச்சர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப புதிய பஸ்நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சம் செலவில் மராமத்து பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இதுவரை பஸ்நிலையம் முடங்கிய நிலையிலேயே உள்ளது.

விரைவுப்படுத்த வேண்டும்

எனவே மாவட்ட நிர்வாகம் அமைச்சர்கள் அறிவுறுத்தியபடி புதிய பஸ்நிலையத்தை செயல்படுவதற்கான வழிமுறைகளை வரைமுறைப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை கடந்த காலங்களை போல இல்லாமல் புதிய பஸ் நிலையம் செயல்படுவதற்காக இறுதி செய்யப்படும் வழிமுறைகளை அனைத்து தரப்பினரும் முறையாக பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்