'மலைகளின் இளவரசி'க்கு மகுடம் சூட்டப்படுமா?

‘மலைகளின் இளவரசி’க்கு மகுடம் சூட்டப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

Update: 2023-06-04 19:00 GMT

கொடைக்கானல் என்ற வார்த்தையை, உதடுகள் உச்சரித்தவுடன் உள்ளமெல்லாம் குதூகலத்தில் துள்ளி விளையாடும். அந்த அளவுக்கு இங்கு நிலவும் குளு, குளு சீசன் அனைவரையும் கொள்ளை கொண்டிருக்கிறது.

'மலைகளின் இளவரசி'

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை தன்னகத்தே கொண்டது தான் கொடைக்கானல். இதற்கு 'மலைகளின் இளவரசி' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது, தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலாதலம். புகழ் பெற்ற கோடைவாசஸ்தலம். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது கொடைக்கானல். வெயில் சுட்டெரிக்கும்போது, இங்கு வீசும் வாடைக்காற்று மனதை வருடும்.

இயற்கை அன்னை கிள்ளி கொடுக்காமல், கொடைக்கானலுக்கு அள்ளி கொடுத்து இருக்கிறாள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மரம், செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்த பசுமை போர்த்திய பூமியாக கொடைக்கானல் எப்போதும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், விழிகளை விரிய வைக்கும் வானுயர்ந்த மலைகள் இங்கு ஏராளம்.

முகடுகளை முத்தமிடும் மேககூட்டம்

மனித இதயங்கள் மட்டுமின்றி, இயற்கையும் கொடைக்கானல் மீது காதல் கொள்ளும் ஆச்சரியங்களும் அன்றாடம் அரங்கேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதன் அழகில் மயங்கி, விண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கி வந்து முகடுகளை மேககூட்டங்கள் முத்தமிட்டு செல்கிறது.

பள்ளத்தாக்கில் சிக்கி கொண்ட பனிமூட்டம், மேலே எழும்பி செல்ல முடியாமல் தவிப்பதையும் இங்கு பார்த்து ரசிக்கலாம். பறவைகளின் கீச்சிடும் சத்தம், செவிகளுக்கு சிறந்த விருந்தாக அமையும். காட்டெருமைகளின் கூட்டம், யானைகளின் நடமாட்டம் மனிதர்களை மிரள செய்வது இங்கு வாடிக்கை.

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதையில் பயணிப்பது ஒரு திகிலான அனுபவத்தை தரும். மலைகளுக்கு மகுடம் சூட்டிய மரங்கள், விண்ணை தொட வேண்டும் என்ற ஆசையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருப்பது விழிகளை விரிய வைக்கும். பகலெல்லாம் பவனி வரும் பகலவனின் பார்வையை, மேககூட்டம் என்ற போர்வை அடிக்கடி மூடி மறைப்பது இங்கு அரங்கேறும்.

இமைகளை மூடுவதே விழிகளுக்கு சுமை என்று கருதும் அளவுக்கு, ஏராளமான இயற்கை எழில் கொஞ்சும் காட்சி கொடைக்கானலில் கொட்டிக்கிடக்கிறது. இதேபோல் இதயத்தை இதமாக்கும் சீதோஷ்ண நிலையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இதனால் தான் பழுத்த மரங்களை தேடி செல்லும் பறவைகளை போல, ஒவ்வொரு கோடை காலத்திலும் கொடைக்கானலுக்கு வந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ெதலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

7 ஆயிரம் அடி உயரம்

தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் கொடைக்கானல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இதனை சிறந்த சுற்றுலாதலமாக உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் இருந்தபோது, ஆங்கிலேய அதிகாரிகள் கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க இங்கு வந்தனர்.

குறிப்பாக அவர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவே கொடைக்கானல் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் வாகன போக்குவரத்து கிடையாது. கரடு, முரடான மலைப்பாதை வழியாக தான் நடந்து செல்ல வேண்டும். இது, ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இயலாத காரியமாக இருந்தது. எனவே டோலி கட்டி அதிகாரிகளை தூக்கி சென்றனர்.

முதல் வாகன போக்குவரத்து

ஆங்கிலேய அதிகாரியை நாற்காலியில் அமர வைத்து டோலி கட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி வழியாக கொடைக்கானல் செண்பகனூருக்கு தூக்கி சென்றிருக்கிறார்கள்.

எனவே கொடைக்கானலுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆங்கிலேயர்கள் தீவிரம் காட்டினர். இதன் பயனாக மலைப்பாதைகள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் மாட்டு வண்டிகளில் அதிகாரிகள் சென்று வந்தனர்.

அதன்பிறகு கடந்த 1915-ம் ஆண்டில் இருந்து கார், சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை உருவானது. கடந்த 1935-ம் ஆண்டு கொடைக்கானலில் முதல் முறையாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

14 கொண்டை ஊசி வளைவுகள்

திண்டுக்கல்லில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவில் கொடைக்கானல் உள்ளது. வத்தலக்குண்டுவில் இருந்து காட்ரோடு வழியாக சுமார் 64 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கொடைக்கானலை சென்றடையலாம்.

இதேபோல் முருக பெருமானின் 3-ம் படை வீடாக திகழும் பழனியில் இருந்து 63 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்து கொடைக்கானலுக்கு செல்லலாம். இங்கு நெஞ்சை நிலைகுலைய செய்யும் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கேரள மாநிலத்தில் இருந்து வருகிற பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த மலைப்பாதை வழியாக கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

கும்பக்கரை அருவி-அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்ல 45 கிலோமீட்டர் தூரம் தான். இந்த மலைப்பாதையை சீரமைக்கும் பணி கடந்த 15 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதேபோல் சித்தரேவு மலைப்பாதை, வழியாகவும் கொடைக்கானலுக்கு வர முடியும்.

ஆனால் எந்த மலைப்பாதைகள் வழியாக வந்தாலும், கொடைக்கானல் நகரில் இருந்து தரைப்பகுதிக்கோ, தரைப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கோ செல்வதற்கு பெருமாள்மலை வரை ஒரே மலைப்பாதை மட்டுமே உள்ளது. இது, மிகப்பெரிய குறைபாடாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கும் வித்திடுகிறது.

தலைவால் நீர்வீழ்ச்சி

பெரும்பாலான சுற்றுலா பயணிகள், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாகவே வருகை தருகின்றனர். இவர்களை முதலில் வரவேற்பது தலைவால் நீர்வீழ்ச்சி தான். டம்டம் பாறை எதிரே இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. மலை முகடுகளுக்கு இடையே வால் போல இந்த அருவியில் தண்ணீர் வழிந்தோடும் எழில் கொஞ்சும் காட்சி அனைவரையும் கவரும்.

பெருமாள்மலை வந்தவுடன், அங்கிருந்து பழனி மலைப்பாதையில் 2 கிலோமீட்டர் சென்றவுடன் பேத்துப்பாறை என்ற இடம் உள்ளது. அங்கு கொஞ்சி விளையாடும் அஞ்சுவீடு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆதி மனிதர்கள் வாழ்ந்த கல் வீடுகள் அங்கு உள்ளன. அங்கு அவர்கள், குளிப்பதற்காக வெட்டப்பட்ட குட்டை இன்றளவும் அழியாத சின்னமாய் அழகாய் காட்சி அளிக்கிறது.

வெள்ளி நீர்வீழ்ச்சி

'எலிபன்ட் வேலி வியூ' எனப்படும் யானைகளை பார்வையிடும் இடம் பேத்துப்பாறையில் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைத்தால் தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள். இதைத்தொடர்ந்து நகரின் நுழைவுவாயில் பகுதியில், வெள்ளி நீர்வீழ்ச்சி அனைவரையும் வரவேற்கும் விதமாக உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல ஆர்ப்பரித்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியின் எழில் கொஞ்சும் காட்சி அனைவரின் மனதையும் கவரும்.

வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில், செல்பி பாயிண்ட் என்ற இடத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகனூர் பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. தனியார் பராமரிப்பில் உள்ள இங்கு பல்வேறு விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நட்சத்திர ஏரி

கொடைக்கானல் நகருக்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்படுவது அங்குள்ள ஏரி தான். நட்சத்திர வடிவில் இந்த ஏரி அமைந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இதனால் அந்த ஏரிக்கு நட்சத்திர ஏரி என்று பெயர் ஏற்பட்டது. சுமார் 4½ கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது இந்த ஏரி.

தற்போது ஏரிக்குள் 3இடங்களில் செயற்கை நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, தற்போது ஜொலித்து கொண்டிருக்கின்றன. அதில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கிறது. இதேபோல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நட்சத்திர ஏரியில் படகுகள் இயக்கப்படுகின்றன.

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்ய தவறுவதில்லை. செயற்கை நீரூற்றுகளை ரசித்தபடி படகு சவாரி செய்து வருகின்றனர். ஏரியை சுற்றிலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிக நேரம் செலவிடும் இடமாக நட்சத்திர ஏரி பகுதி மாறி விட்டது என்றே சொல்லலாம்.

பூக்களின் புன்னகை

நட்சத்திர ஏரியின் அருகே பிரையண்ட் பூங்கா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவையொட்டி இங்கு மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடந்தது. இதையொட்டி பூங்காவில் லட்சக்கணக்கான பூக்கள் பூங்காவில் பூத்துக்குலுங்கின. அந்த 5 நாட்களில் மட்டும் 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவை பார்வையிட்டுள்ளனர். இதேபோல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து புன்னகை சிந்தும் பூக்களை ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமை பள்ளத்தாக்கு

பிரையண்ட் பூங்காவின் ஒரு முனையில் 'கோக்கர்ஸ் வால்க்' என்ற இடம் உள்ளது. ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றுலா பயணிகள் நடந்து சென்றபடியே இயற்கை எழில் காட்சிகளை இங்கு கண்டு களிக்கலாம். இதுமட்டுமின்றி அங்குள்ள தொலைநோக்கி மூலம் மதுரை, பெரியகுளம், வைகை அணை போன்ற இடங்களையும் பார்வையிடலாம்.

இதனையடுத்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் தொடங்குகின்றன. முதலாவது 'தற்கொலை பாறை' என்று அழைக்கப்பட்ட பசுமை பள்ளத்தாக்கு உள்ளது. பில்லர் ராக்ஸ் என்று அழைக்கப்படும் தூண்பாறை சிறந்த சுற்றுலா இடம் ஆகும். இங்கு மேக கூட்டங்கள் ஆக்கிரமிப்பது வாடிக்கையாக உள்ளது.

ராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்பதை போல் காட்சி அளிக்கும் பைன் மரக்காடுகள் பகுதியை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். குணா குகை, மோயர்பாயிண்ட் உள்ளிட்ட இடங்களும் பார்த்து ரசிக்க கொடைக்கானலில் உண்டு.

குழந்தை வேலப்பர் கோவில்

கொடைக்கானலில் உள்ள சிறந்த சுற்றுலா இடங்களில் கூக்கால் ஏரியும் ஒன்றாகும். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்தளிப்பது இல்லை கூக்கால் ஏரி.

இதேபோல் ஓராவி அருவி, போளூர் கிராமத்தில் உள்ள புகழ் வாய்ந்த புலவச்சியாறு அருவி ஆகியவை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த விருந்தாக அமைகிறது. கொடைக்கானலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் பூம்பாறை கிராமம் உள்ளது. இயற்கை எழில் மிகுந்த இந்த கிராமத்தில் வசிப்போரின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். படிக்கட்டு அமைத்திருப்பதை போல தோட்டங்கள் இங்கு காட்சி அளிக்கும்.

பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவில் இங்கு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்லும் இடமாக இக்கோவில் திகழ்கிறது. இதே போல்அங்குள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் செட்டியார் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

செயல்படாத 'இ டாய்லெட்'

இதேபோல் கொடைக்கானல் நகர் மற்றும் வனப்பகுதியில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. ஆனால் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக வாகன நிறுத்துமிடங்கள் போதிய அளவில் இல்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கழிப்பறை வசதிகளும் சுற்றுலா இடங்களில் சரிவர கிடையாது. இதனால் திறந்தவெளி கழிப்பிடங்கள் உருவாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நட்சத்திர ஏரியை சுற்றி பல்வேறு இடங்களில் 'இ டாய்லெட்' எனப்படும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது இவை அனைத்தும் செயல்படாத நிலையில் காட்சி பொருளாகி விட்டது.

புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறையும் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்தால், ஏரியை சுற்றியுள்ள பகுதியில் ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. மழையில் நனைந்து கொண்டே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மகுடம் சூட்டப்படுமா?

ஆசை, ஆசையாய் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அல்லல்படுவது ஆண்டுதோறும் வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் நடந்த கோடைவிழாவையொட்டி, கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு நகரங்களில் இருப்பது போல கொடைக்கானல் நகரிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளி முதல் அப்சர்வேட்டரி வரை மேம்பாலம் அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இதேபோல் நகர் மற்றும் வனப்பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய சுற்றுலா இடங்களை கண்டறிந்து, சுற்றுலா பயணிகள் அங்கு எளிதாக சென்றுவர பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா இடங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.

கொரோனா என்னும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து மீண்ட பிறகு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது என்றனர். 'மலைகளின் இளவரசி'க்கு மகுடம் சூட்டப்படுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்