அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?

அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா? என்பது குறித்து வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-18 18:32 GMT

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

வளர்ச்சி அதிகரிக்கும்

ஆற்காட்டை சேர்ந்த ஆடிட்டர் நிறைமதி அழகன்:-

நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் கடந்த அக்டோபர் மாதம் இருந்த 6.77 சதவீதத்தில் இருந்து நவம்பர் மாதம் 5.88 சதவீதமாகவும், அதேபோல மொத்தவிலை குறியீட்டு எண் 8.39 சதவீதத்தில் இருந்து 5.85 சதவீதமாகவும் குறைந்திருப்பதை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டி நாட்டின் பொருளாதாரம் சீராக கையாளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது நாட்டின் பணவீக்கம் குறைந்திருப்பதை காட்டுகிறது. பணவீக்கம் அல்லது விலைவாசி குறியீட்டு எண் குறைந்தால் சென்ற மாதம் சூப்பர் மார்க்கெட் சென்று 1,000 ரூபாய்க்கு வாங்கியதை இந்த மாதம் அதைவிட குறைந்த விலைக்கு வாங்கலாம். அதனால் நுகர்வோர் மேலும் சில பொருட்களை வாங்குவர். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதே நேரத்தில் விலைவாசி குறியீட்டு எண் மிகவும் குறைந்து போனால் உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டம் அடையும் வாய்ப்பும், நாட்டின் உற்பத்தி குறையும் வாய்ப்பும் உண்டு. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் படும் கஷ்டத்தை அடிக்கடி நாம் நாளேட்டில் படித்துள்ளோம். எனவே விலைவாசி குறியீட்டு எண் குறைந்துவிட்டது என்பதில் சந்தோஷப்படும் அதே நேரத்தில், அது மேற்கூறியது போல் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மளிகை வியாபாரி செல்வம்:- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பண வீக்கம் குறைந்துள்ளது என கூறியுள்ளார். பணவீக்கம் குறைந்தால் விலைவாசியும் குறையும் என்பது நடைமுறை. மளிகை பொருட்களில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்பட பல பொருட்களின் விலை முன்பை விட சற்று குறைந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் சற்று ஆறுதல் அடைவார்கள். குறிப்பாக இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இன்னும் விலைவாசி குறைந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

விலை குறையாது

திருப்பத்தூரை சேர்ந்த நந்தகுமார்:- மத்திய நிதி மந்திரி பண வீக்கம் குறைந்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. அப்படி குறைந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் விலைவாசி குறைவதற்கு வாய்ப்பு கிடையாது. அனைத்து பொருட்களின் விலையும் இன்று பலமடங்கு உயர்ந்து விட்டது. அதற்கு காரணம் பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரித்து விட்டது. அவர்கள் வாங்கும் சம்பளம் அதிகரித்து விட்டதால் பொருட்களின் விலையும் உயரத்தான் செய்யும், குறையாது. இன்று மோட்டார்சைக்கிள், செல்போன் இல்லாத வீடு இருக்கிறதா. ஒரு பகுதியில் 10 கடைகள் இருந்த இடத்தில் அங்கு 100 கடையும், 100 கடை இருந்த இடத்தில் 1,000 கடை என எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. கொரோனா தொற்று முடிந்த பிறகு இன்று எந்த நிறுவனமாவது நஷ்டத்தில் இயங்குவதை கூற முடியுமா?. இன்று தங்கம் எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏறினாலும் அதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்து என்று யாராலும் சொல்ல முடியாது. ஆகவே பணவீக்கம் குறைந்து விட்டது, அதனால் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும் என்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பணவீக்கம் குறைந்தாலும், குறையா விட்டாலும் விலைவாசி ஒருபோதும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நெறியாளர் குருமூர்த்தி:- ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தாலும் பணவீக்கம் ஏற்படும். ஏனென்றால் ஏற்றுமதியின் போது குறைவான பணம் உள்ளே வரும். இதுவே இறக்குமதி செய்ய அதிக பணத்தை டாலராக மாற்றி செலவு செய்ய வேண்டி வரும். இதனாலும் விலை ஏற்றம் வரும் என்பதால் பண வீக்கம் ஏற்படும். அரசுகளின் சில கொள்கை முடிவுகளால் விலை ஏற்றங்கள் ஏற்பட்டு பண வீக்கம் ஏற்படும். மக்களின் தேவைக்கு குறைவாக ஒரு நாட்டில் பொருட்களின் உற்பத்தி இருக்கும்போது பண வீக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரே பொருளுக்கு அதிக பணத்தை கொடுக்கும்போது பண வீக்கம் ஏற்படுகிறது.

கடன் சுமை அதிகரிக்கும்

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகி முரளிதரன்:- தற்போது உள்ள சூழ்நிலையில் விலைவாசி உயர்வினால் சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் போன்றோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வேலை வாய்ப்புகள் குறைந்து உள்ளது. எனவே அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மேலும் பண வீக்கத்தை குறைப்பதனால் பெட்ரோல், டீசல், கியாஸ் போன்றவற்றின் விலையும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். வங்கிகளில் கடன்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் பணப்புழக்கமும் குறைந்து காணப்படுகிறது. விலைவாசிக்கு ஏற்ப பெரும்பாலானோருக்கு ஊதியம் கிடைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் எட்வர்ட் வில்லியம்:- நம் நாட்டு பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. ஆனால் நாம் வெளிநாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்யும் போது அதிக விலை கொடுத்து வாங்குகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதை நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு வைக்கும் போது நுகர்வோர் அந்த பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இதனால் நுகர்வோரின் வாங்கும் திறன் குறைகிறது. நுகர்வோர்களுக்கு மேலும் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். நம் நாட்டின் பண மதிப்பு குறைவுக்கு உக்ரைன் போர் ஒரு காரணம். கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நமது பண மதிப்பு குறைகிறது. இதனால் சராசரியாக பொதுமக்களின் வாங்கும் திறன் மேலும் மேலும் குறைவதால் கடன் சுமை அதிகரிக்கும். இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதே சூழ்நிலை நீடித்தால் நடுத்தட்டு, அடித்தள மக்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்