அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

Update: 2022-12-18 19:00 GMT

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

விலை குறையும்

கே.எஸ்.கே.நடேசன் (தேனி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர்):- பணவீக்கம் குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. உலோகம், ஜவுளி, ரசாயனம் போன்றவை சார்ந்த தொழில் துறைக்கும் இது பயன் அளிக்கும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்து இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் விவசாயம் செழிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் விளைச்சல் அதிகரிக்கும். அதன் மூலமும் அரிசி, பருப்பு, பயறு வகைகள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து கடன்களுக்குமான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. பணப்புழக்கம் குறைவதன் தாக்கமாகவும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் வியாபாரிகளைவிடவும், பொதுமக்களுக்கு தான் மிகவும் நல்லது.

இந்துராணி (அங்கன்வாடி ஊழியர், டொம்புச்சேரி) :- அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. பல்வேறு காரணங்களால், சில ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்துள்ளது. தற்போது பணவீக்கம் குறைந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைய வேண்டும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்தபோது விலைவாசியை உயர்த்தியவர்கள், பண வீக்கம் குறைந்ததை காரணம் காட்டி விலைவாசியை குறைக்க வேண்டும். அப்போது தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொருத்திருந்து பார்க்க வேண்டும்

லட்சுமணன் (உணவக உரிமையாளர், அன்னஞ்சி) :- பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. உணவு தொழிலை பொருத்தவரை அத்தியாவசிய பொருட்களின் பயன்பாடே அதிகம். சமீப காலமாக எண்ணெய், பருப்பு, காய்கறி விலை ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. காய்கறி விலை குறையும் போது, எண்ணெய், பருப்பு வகைகள் விலை உயர்கிறது. எண்ணெய் விலை குறையும் போது காய்கறி விலை உயர்வதுமாக உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் மகிழ்ச்சி. ஆனால் குறையுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சதீஷ் (வர்த்தகர், கம்பம்) :- பணவீக்கம் குறைந்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை கொஞ்சம் குறையவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை குறையலாம். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தால் தான் தொழில் முனைவோர், வர்த்தகர், மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பண வீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்