குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சி வரை குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-25 18:45 GMT

சீர்காழி:

சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சி வரை குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் திட்டை ரோடு உள்ளது. இந்த ரோட்டை திட்டை, பசும்பொன் முத்துராமலிங்கம் தெரு, தட்சணாமூர்த்தி நகர், கற்பகம் நகர், ஐம்பொன் நகர், சின்னத்தம்பி நகர், ஆனந்தம் நகர், ஏ.என்.எஸ்.நகர், முருகையா நகர், குளங்கரை, திட்டை, சன்சிட்டிநகர், தனலட்சுமி நகர், வைத்தியநாத நகர், மகாலட்சுமி நகர், தில்லைவிடங்கன், புளியந்துறை, கன்னி கோவில் தெரு, திருத்தோணிபுரம், செம்மங்குடி, சிவனார்விளாகம், நங்கநல்லத் தெரு, அண்ணா நகர், பொதிகை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக தினமும் பள்ளி வாகனம் உள்பட 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலை சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சிக்குட்பட்ட காமாட்சி நகர் வரை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த முதியோர்கள், மாணவர்கள், விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தற்போது பெய்த மழையில் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி திட்டை ரோட்டில் சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சி வரை குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்