வடகாடு பகுதியில் குளங்கள் சீரமைக்கப்படுமா?

வடகாடு பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-17 18:44 GMT

வடகாடு:

குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டுதான் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, காட்டாற்று தண்ணீர் இப்பகுதிகளில் வந்தும் கூட அதனை சேமித்து வைக்க போதுமான அளவிற்கு குளங்கள் இருந்தும் அவைகள் தூர்வார படவில்லை. மேலும், குளங்களுக்கு மத்தியில், குளத்து கரைகளிலும் அடர்ந்து படர்ந்து இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாததாலும் குளங்கள் கால் வாசி கூட நிரம்பாத நிலை இருந்து வருகிறது. மேலும் ஒரு சில குளங்களுக்கு தண்ணீர் செல்ல வரத்து வாரிகளும் கூட இல்லாத நிலை தான் உள்ளது.

அணைக்கட்டுகள் கட்டமைப்பு

திருவரங்குளம் வனப்பகுதிகளில் கனமழை பெய்யும் சமயங்களில் காட்டாறு தண்ணீராக வரும் மழை நீரானது, ஆலங்குடி அம்புலி ஆறு வழியாக, சூரன்விடுதி வெட்டுப்பள்ள அருவியில் விழுந்து, சிக்கப்பெட்டி, மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. மேலும் இவை செல்லும் வழியில் உள்ள மாங்குளம் உள்ளிட்ட குளங்கள் மற்றும் ஏரிகளை நிரம்பிய வண்ணம் செல்லுமளவிற்கு வழித்தடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் மூலமாக, எண்ணற்ற அணைக்கட்டுகள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோரிக்கை

அதன் பின்னர் அணைக்கட்டுகள் அனைத்தும் உரிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வடகாடு பகுதி விவசாயிகளின் நீர் நிலை ஆதாரமாக இருந்து வரும் மாங்குளம் உள்ளிட்ட குளங்கள் மற்றும் ஏரிகளை முழுமையாக தூர் வாரவும், குளங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்றவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சேதமடைந்துள்ள மாங்குளம் அணைக்கட்டையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூர்வார வேண்டும்

வடகாடு பகுதியை சேர்ந்த குணா கூறுகையில், விவசாயிகளது நீர் ஆதாரமாக இருந்து வரும் குளங்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு அரசு உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தண்ணீர் சேமிப்பு

கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான சிவராசு கூறுகையில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளை சீரமைத்தால் மழை நாட்களில் தண்ணீரை சேமிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.

குளக்கரைகளை சீரமைக்க...

கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த் கூறுகையில், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பலமிழந்த நிலையில் இருந்து வரும் குளத்து கரைகளை சீரமைக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்