குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை- நாகை புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை:
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, நாகூர், திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக 2 வழி சாலையாக மாற்றப்பட்டது. தற்போது கோவை, பல்லடம், நாமக்கல், சேலம், ஈரோடு, தாராபுரம், திருப்பூர், கரூர் திருச்சியில் இருந்து வருபவர்கள் தஞ்சை நகருக்குள் வராமல் மேற்கண்ட ஊருக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும். ஆனால் இந்த புறவழிச்சாலை பகுதியில் ஆங்காங்கே வசிப்பவர்களும், தஞ்சை நகரில் உள்ள கடைகளில் இருந்தும் குப்பைகளை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புறவழிச்சாலை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.