ஊராட்சி மன்ற கட்டிடம் இப்ப விழுமோ? எப்ப விழுமோ?
திட்டக்குடி அருகே இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநத்தம்,
சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகம்
திட்டக்குடி அடுத்த மருதத்தூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அலுவலகத்தில் ஜன்னல்களும் இல்லை. இதனால் இந்த அலுவலகத்தில் ஊராட்சி தொடர்பான கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளதால், எந்த ஒரு பணிகளும் செய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் ஊராட்சி தொடர்பான புகார்களை தெரிவிக்க முடியாத நிலையும் உள்ளது.
சீரமைக்கப்படுமா?
அலுவலகம் செயல்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் உள்ளே புகுந்து சூதாடுவது, மதுஅருந்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அருகில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் அச்சமடைகின்றனர். சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது இதை இடித்து அகற்றிவிட்டு புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.