பாதியில் நிற்கும் உலர் களம் அமைக்கும் பணி:நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?தலைவாசல் சுற்றுவட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு

தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உலர் களம் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. இந்த பணியை விரைந்து முடித்து நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-20 22:16 GMT

சேலம்,

நெல் கொள்முதல் நிலையம்

சேலம் மாவட்டம் தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு சாகுபடியிலும் ஈடுபடுகிறார்கள். இந்த பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு வாங்கி செல்வதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், தலைவாசலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் சமீபத்தில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாக மாறி உள்ளது.

உலர் களம் அமைக்கும் பணி

அதேநேரத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க பாதுகாப்பான இடவசதி செய்து கொடுக்கும் வகையில் ரூ.10 லட்சத்தில் உலர் களம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகளும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே, இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விரைவில் உலர் களம் அமைத்து அதனை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறிய கருத்துகளை காண்போம்.

இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது

விவசாயி கோவிந்தன் (தலைவாசல்):- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் பல கிராமங்களில் இருந்து தங்களது நிலத்தில் விளையும் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்தனர். அதன்பிறகு இந்த கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்காமல் திறந்த வெளியில் வைத்திருந்ததால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து பயிர்கள் முளைத்து விட்டன. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தலைவாசல் நெல் கொள்முதல் நிலையத்தில் உலர் களம் அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. அதை விரைவுப்படுத்தி விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

விரைவில் திறக்க வேண்டும்

விவசாயி சரவணன்(காட்டுக்கோட்டை):- தலைவாசலில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து புரோக்கர்கள் தான் நெல்லை கொள்முதல் செய்து செல்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு இழப்பும், புரோக்கர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. தற்போது அங்கு ரூ.10 லட்சத்தில் உலர் களம் அமைக்கும் பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவாசல், புத்தூர், ஊனத்தூர், வரகூர், சிறுவாச்சூர், நாவக்குறிச்சி போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தலைவாசல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் உலர் களம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்தவுடன் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்