நெல் உலர் நிலையம் செயல்பாட்டுக்கு வருமா?
மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் உலர் நிலையம் செயல்பாட்டுக்கு வருமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் உலர் நிலையம் செயல்பாட்டுக்கு வருமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நெல் உலர் நிலையம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் வேளாண் அலுவலகம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நெல் உலர் நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் மின்சார இணைப்பு கொடுக்கப்படாததால் இதுவரை இந்த நெல் உலர் நிலையம் செயல்படாத நிலையில் உள்ளது. இந்த உலர் நிலையத்தில் தினமும் 10 டன் அளவிற்கு நெல்லை உலர வைக்கும் வசதி உள்ளது.
நெல்லை உலர வைக்க முடியாமல் அவதி
தற்போது மழைக்காலம் என்பதால் நெல்லை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த உலர் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் நெல்லை உலர வைப்பதற்கு விவசாயிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும்.
மழைக்காலம் என்பதால் அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் நெல் ஈரப்பத பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைவது தவிர்க்கப்படும். இந்த நிலையம் அமைக்கப்பட்டு 6 மாதங்களாகியும் செயல்பாட்டுக்கு வராததால் அதில் உள்ள கருவிகளும், எந்திரங்களும் துருப்பிடித்து பழுதடைய வாய்ப்பு உள்ளது.
எனவே நெல் உலர் நிலையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நவீன முறைகள்
மேலும் இந்த உலர் நிலையத்தில் நெல்லை உலர வைப்பதற்கு விறகு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தினமும் ஏராளமான விறகுகள் தேவைப்படுகிறது.
இதனால் விறகு பற்றாக்குறை ஏற்படும் சூழலும் உள்ளது. தற்போது நவீன முறைகளில் நெல் உலர்த்துவதற்கு வசதிகள் உள்ளது. விறகு பயன்பாட்டை தவிர்த்து நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும் உதவியாக இருக்கும்
இதுகுறித்து மன்னார்குடியை அடுத்த இடையர்நத்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கரன் கூறியதாவது:- தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறுவை அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரிப்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை.
இது போன்ற நிலையில் நெல் உலர்த்தும் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே உடனடியாக நெல் உலர்த்தும் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றார்.