பழைய போலீஸ் நிலைய கட்டிடம் இடித்து அகற்றப்படுமா?

விரிசல் அடைந்த சுவர்கள், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடம் இடித்து அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-04 20:00 GMT

கிணத்துக்கடவு

விரிசல் அடைந்த சுவர்கள், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடம் இடித்து அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழைய கட்டிடம்

கிணத்துக்கடவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இதன் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதி உள்ளது.

இந்த நிலையில் நாளடைவில் அந்த போலீஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலைக்கு சென்றது. இதனால் அங்கு பணியாற்றும் போலீசார் மற்றும் வழக்கு தொடர்பாக வந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு அந்த கட்டிடத்துக்கு பின்பகுதியில் இருந்த காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில்தான் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் பழைய போலீஸ் நிலைய கட்டிடம் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது.

இடித்து அகற்ற வேண்டும்

இதற்கிடையில் அந்த பழைய போலீஸ் நிலைய கட்டிடம் புதர் செடிகளால் சூழப்பட்டு கிடக்கிறது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், புதிய போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து வருகின்றன. இதனால் அங்கு உள்ளவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அந்த பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து கிடக்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் புதர் செடிகள் சூழ்ந்து பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டது. அங்கிருந்து வீடுகளுக்குள் பாம்புகள் படையெடுக்கின்றன. எனவே அந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்