கரூரில் ரூ.60 லட்சத்தில் கட்டப்படும் புதிய உழவர் சந்தை விரைவில் திறக்கப்படுமா?

கரூர் காந்திகிராமத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்படும் புதிய உழவர் சந்தை விரைவில் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-06-11 18:35 GMT

 உழவர் சந்தைகள்

கரூர் மாவட்டத்தில், விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தாங்களே நேரிடையாக விற்பனை செய்து பயன்பெறும் வகையில் கரூர் பழைய பஸ் நிலையம் அருகே, வெங்கமேடு, பள்ளப்பட்டி, குளித்தலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான காய்கறிகளை அங்கு சென்று நேரடியாக உரிய விலையில் பெற்று பயன் பெற்று வருகின்றனர்.

மக்களிடம் வரவேற்பு

இதையடுத்து கரூர் உள்பட 9 மாவட்டங்களில் புதிய உழவர் சந்தைகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தனர். அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர் காந்திகிராமத்தில் புதிய உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. கரூர்காந்தி கிராமத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடியிருந்து வரும் 5000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனால் அவர்கள் கரூர் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை இருந்தது.

இந்தநிலையில் கரூர் காந்தி கிராமத்திலேயே புதிய உழவர் சந்தை தொடக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.60 லட்சம்

இதையடுத்து தெற்கு காந்திகிராமம் பூங்கா சாலையில் திருவள்ளுவர் பூங்கா பகுதியில் உள்ள 40 சென்ட் காலி இடத்தில் புதிய உழவர் சந்தை அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் தற்போது 16 கடைகள் மற்றும் அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்து விட்டது.

தற்போது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனியாக கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தைக்கு தேவையான தராசு எடை கற்கள் ஆகியவையும் வாங்கப்பட உள்ளன. எனவே அந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விரைவில் தொடக்கம்

இதுகுறித்து அதிகாரிஒருவர் கூறுகையில், கரூர் காந்தி கிராமத்தில் புதியஉழவர் சந்தை கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இங்கு எண்ணெய், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து கொள்ளலாம், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்