அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா?

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-17 18:45 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகம்

திருவாரூர் தண்டலை ஊராட்சி பிரதான தஞ்சை சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடங்களில் பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

மேலும் இந்த வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நீச்சல் குளம், வனத்துறை, வேளாண்மை துறை என தனித்தனி கட்டிடங்கள் அமைந்துள்ளது.

குறுகிய சாலை

இந்த கலெக்டர் அலுவலக வளாகம் பரந்து விரிந்த பகுதியாக காணப்படுகிறது. ஆனால் அந்த பகுதியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை என்பது மிக குறுகிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலை பிரதான தஞ்சை சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது.

மேலும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு என தனியாக டவுன் பஸ்கள், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விபத்து, ஆபத்து கால உயிர் காக்கும் சேவையில் ஈடுபடும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இடைவிடாது செயல்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறது.

108 ஆம்புலன்ஸ் செல்ல சிரமம்

இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த குறுகிய சாலையை கடந்து செல்ல மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் மகளிர் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த பகுதியில் எந்த நேரமும் மக்கள் கூட்டமும், வாகனமும் நிறுத்தப்படுவதால் பஸ்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த குறுகிய சாலை சேதமடைந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதில் ஒரு வாகனம் சென்றால் எதிரில் வாகனம் சாலையை விட்டு மண்பாதையில் இறக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை இருந்து வருகிறது. எனவே இந்த குறுகிய சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகலப்படுத்த வேண்டும்

இதுகுறித்து திருவாரூர் அருகே அம்மையப்பனை சேர்ந்த சீனி செல்வம் கூறுகையில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலகங்களும் உள்ளன. குறிப்பாக அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் எந்தநேரமும் வந்து செல்கிறது.

குறுகிய சாலையில் வாகனங்கள் செல்லும் போது ஆம்புலன்ஸ் ஒருசில நேரங்களில் செல்ல காலதாமதம் ஆகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்திட வேண்டும். மேலும் சாலையோர மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்