மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மூச்சுத்திணறல், நோய்த்தொற்றால் அவதிப்படுவதால் மாநகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூச்சுத்திணறல், நோய்த்தொற்றால் அவதிப்படுவதால் மாநகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பை கிடங்கு
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தினமும் 90 டன்னுக்கும் அதிகமான குப்பை கழிவுகள் மாநகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அவற்றை மாநகராட்சி தொழிலாளர்கள் மூலம் பழனி சாலையில் முருகபவனத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிடங்கு பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டுவது குறைந்து வருகிறது. அதாவது குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்தெடுத்து அவற்றின் மூலம் உரம் தயாரிக்கும் பணிகள் நடப்பதால் குப்பை கிடங்கில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை. தற்போது தினமும் 5 முதல் 8 டன் வரையே குப்பைகள் கொட்டப்படுகிறது.
புகை மூட்டம்
ஆனாலும் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் அருகில் உள்ள முருகபவனம், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, கருணாநிதி நகர், முத்துராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.மேலும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அப்போது குப்பை கிடங்கில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை புகைமூட்டமாக காணப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. ஆனாலும் துர்நாற்றம் மற்றும் புகைமூட்டத்திற்கு மத்தியில் வசிக்க வேண்டிய அவலநிலையில் தான் அப்பகுதி மக்கள் தற்போதும் உள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மாநகராட்சி எல்லைக்குள் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
நிலத்தடி நீர் மாசடைகிறது
முத்துராஜ் நகரை சேர்ந்த முனீஸ்வரி கூறுகையில், குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசியபடியே உள்ளது. இதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. மேலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எங்கள் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கும். இதனால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு பொதுமக்கள் ஆளாகின்றனர் என்றார்.
முத்துராஜ் நகரை சேர்ந்த அஞ்சலி கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடிநீர் மாசடைந்து வருகிறது. மேலும் குப்பைகள் எரிக்கப்படும் போது காற்றில் பறந்துவரும் தூசுகள் வீடுகளில் குடிப்பதற்காக வைத்திருக்கும் தண்ணீரில் படிந்துவிடுகிறது. அதனை குடிப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
மார்க்கெட் கழிவுகள்
முருகபவனத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், விஷ பூச்சிகளின் உறைவிடமாக குப்பை கிடங்கு மாறி வருகிறது. இதனால் இரவில் அந்த வழியாக நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். குப்பைகள் கொட்டுவது தற்போது குறைந்தாலும் தொடர்ந்து குப்பை கிடங்கு பயன்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளில் 45 டன் மக்கும் குப்பைகள் ஆகும். அவை உரமாக மாற்றப்படுகிறது. மேலும் 5 டன் குப்பைகள் சமையல் எரிவாயுவாக மாற்றப்படுகிறது. 15 டன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் சிமெண்டு தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பூமார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் சேகரமாகும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மட்டுமே முருகபவனம் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. குப்பை கிடங்கால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.