கூடலூர்-கோழிக்கோடு சாலை சீரமைக்கப்படுமா?
கூடலூர்-கோழிக்கோடு சாலை பழுதடைந்து கிடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர்-கோழிக்கோடு சாலை பழுதடைந்து கிடப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பழுதடைந்த சாலைகள்
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரத்துக்கு சாலைகள் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சரக்கு லாரிகள் தனியார் வாகனங்கள் ஏராளமாக இயக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பின்னர் வெயில் சமயத்தில் பழுதடைந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது தூசி படர்ந்து அனைத்து தரப்பினரையும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இதேபோல் கூடலூரில் இருந்து கேரளா தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகளை அழைத்துக் கொண்டு ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகிறது. அவசர காலங்களில் பழுதடைந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று உரிய நேரத்தில் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
சாலை சீரமைக்கப்படுமா?
மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தூசி படர்ந்த சாலைகளால் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சாலைகளை சீரமைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பிலும் விரைவாக சாலை அமைக்கப்படும் என விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு இடையே பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் சாலை சீரமைப்பு பணி எப்போது நடைபெறும் என பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, நீண்ட காலமாக கூடலூர்-கோழிக்கோடு சாலை பழுதடைந்து கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் கூட பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் வாகன விபத்துகளும் அதிகளவு நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.