தடுப்பணையுடன் கதவணை அமைக்கப்படுமா?

மோகனூர், நெரூர் இடையே தடுப்பணையுடன் கூடிய கதவணை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Update: 2022-10-25 19:54 GMT

மோகனூர்

ரூ.700 கோடியில் தடுப்பணை

நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே ரூ.700 கோடியில் தடுப்பணையுடன் கூடிய கதவணை அமைக்கும் திட்டம் கடந்த 23.8.2021 அன்று தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மோகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள், மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். மேலும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்கிற ஆவலுடன் காத்திருந்தனர்.

மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்து வருகிறது. மோகனூர் பகுதியில் தடுப்பணை கட்டும்போது, சுமார் 5 கி.மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கும். அவ்வாறு தண்ணீர் தேங்கும் போது அந்த பகுதியில் உள்ள நீரேற்று பாசனங்கள், கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல் ஆட்டோ நகர் செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டம், மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் பயன் பெறும்.

திட்டம் கைவிடப்பட்டது

இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் பிரச்சினை ஏற்படாது. விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதன் மூலம் மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்தது 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூன்று போகம் விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென நீர்வள துறையினர் கடந்த 2.3.2022-ந் தேதி இத்திட்டம் அமைவதற்கு சாத்தியமில்லை, என கூறி மோகனூர் - நெரூர் இடையே காவிரி ஆற்றில் அறிவிக்கப்பட்டு இருந்த கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் மோகனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மறுபரிசீலனை

இதுகுறித்து ஒருவந்தூர் கூட்டுறவு நீரேற்று பாசன சங்க தலைவர் செல்ல.ராசாமணி கூறியதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய கதவனை கட்டப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் மோகனூர் என்பதை மாற்றி நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூருக்கும், கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையில் அமைக்க வேண்டும் எனகூறி தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு அளித்தோம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும் கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையில் காவிரி ஆற்றின் நீளமானது 1,126 மீட்டர், ஆனால் ஒருவந்தூர், நெரூர் காவிரி ஆற்றின் நீளமானது 905 மீட்டர். ஆகவே மோகனூர் என்பதை ஒருவந்தூர் என மாற்றி தடுப்பணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டும் போது 220 மீட்டர் தூரம் குறையும். இதனால் திட்டச் செலவு குறையும். அத்துடன் ஒருவந்தூரில் இருந்து பட்டணம் சீராப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டம், நாமக்கல் கூட்டு குடிநீர் திட்டம், எருமபட்டி கூட்டு குடிநீர் திட்டம், காட்டுப்புத்தூர், நெரூர் வாய்க்கால் மற்றும் இதை சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றும் தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில் திடீரென தடுப்பணை திட்டம் கைவிடப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் இத்திட்டத்தை கைவிடாமல், ஒருவந்தூர் -நெரூர் இடையே தடுப்பணையுடன் கூடிய கதவணை கட்ட வேண்டும் என விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனவே இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

மோகனூர் வாய்க்கால் ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் கே.ஓ.யூ.சேனாதிபதி:- மோகனூருக்கும், நெரூருக்கும் இடையில் காவிரி ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய கதவணை அமைக்கும் திட்டம் ரூ.700 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்டு, பணி தொடங்கும் முன்பே திட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.

விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும், விவசாய கூலித் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறையும். கால்நடைகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே அரசு இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.

சீமை கருவேல மரங்கள்

செல்லிபாளையம் விவசாயி தண்டபாணி:-

மோகனூர் - நெரூர் இடையே அறிவிக்கப்பட்டு இருந்த தடுப்பணை அமைக்கும் திட்டத்தை திடீரென அரசு கைவிட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த திட்டத்தை தொடங்கினால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பயன் அடைவார்கள். எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காவிரி ஆற்றின் கரையோரம் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஏராளமான சீமைகருவேல மரங்கள் மற்றும் செடி, கொடி வளர்ந்து, கற்களும் குவிந்து கிடக்கின்றன. கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, அப்பகுதியை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்