வால்பாறையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வால்பாறையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
வால்பாறை
வால்பாறையில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள் தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள்.
வடிகால்களில் அடைப்பு
வால்பாறை நகர் பகுதியில் வாழைத் தோட்டம், காமராஜர் நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர், கக்கன்காலனி, திருவள்ளுவர் நகர், சிறுவர் பூங்கா ஆகிய குடியிருப்பு பகுதிகளும், நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியும் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் மார்க்கெட் பகுதியில் மழைத் தண்ணீர் செல்வதற்கு வடிகால்கள் உள்ளது. ஆனால் கனமழை பெய்யும் போது மழைத் தண்ணீர் வடிகால்களில் செல்லாமல் சாலையிலும், மார்க்கெட் பகுதியில் பொது மக்கள் நடக்கும் வழிகளிலும் படிக்கட்டுகளிலும் செல்கிறது. குடியிருப்புகளிலும் இதே நிலை தான் மழைத் தண்ணீர் வடிகால்களில் செல்லாமல் நடைபாதைகளிலும் குடியிருப்புகள் வழியாகவும் செல்வதோடு ஒருசில இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பராமரிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- வால்பாறை பகுதியில் தற்போது வழக்கத்திற்கு மாறாக கோடை மழை பெய்து வருகிறது. வருகிற ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்யும் கோடை மழையில் தண்ணீர் முழுமையாக மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் செல்லாமல் சாலையிலும் மார்க்கெட் பகுதி நடைபாதைகளிலும் சென்று வருகிறது. இதனால் கனமழை பெய்யும் சமயத்தில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியிலும் நடைபாதைகளிலும் சாலைகளிலும் நடந்து செல்ல முடிவதில்லை. ஆங்காங்கே கழிவுகளால் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் வடிகால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களிலும், வடிகால் கழிவுநீர் சாக்கடைகளில் அடைப்புகள் மற்றும் உடைந்து போன நிலையில் இருக்கும் இடங்களிலும் உரிய பராமரிப்பு செய்து தங்குதடையின்றி மழைத் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.