பாழடைந்து கிடக்கும் நீதிமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. இதனை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-05 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. இதனை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது

திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோட்டில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் அமைந்த கட்டிடங்கள் உள்ளன. ஒரே இடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், கருவூலம் -கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சிறைச்சாலை, கிராம நிர்வாக அலுவலர்களின் சங்க கட்டிடம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன.

இந்த கட்டிடங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குறிப்பாக 125 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம், போலீஸ் நிலையம், சிறைச்சாலை, கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவை ஒரே கட்டிடத்தோடு உள்ளன. ஏனென்றால் நீதிமன்றம் அருகிலேயே போலீஸ் நிலையம், சிறைச்சாலை மற்றும் கருவூலம் ஆகியவை இருக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்ற பணிகளும் காவல்துறை பணிகளும் சிறப்பாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே இந்த கட்டிடங்கள் ஒரே இடத்தில் கட்டப்பட்டன.

நீதிமன்ற கட்டிடம் இடமாற்றம்

இதில் இருந்த நீதிமன்ற கட்டிடம் சில வருடங்களுக்கு முன்பு, திருத்துறைப்பூண்டி டி.மு.கோர்ட்டு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் இந்த கட்டிடங்கள் பயன்பாடு இல்லாமல் பாழடைந்து,செடி கொடிகள் வளர்ந்து அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கிறது.

எத்தனையோ அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கும் போது, அரசுக்கு சொந்தமான இந்த ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்தை அரசு பராமரிக்காமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் அந்த பகுதிக்கு சென்று மதுகுடித்துவிட்டு மதுபாட்டிலை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர்.

பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது

இதுகுறித்து வக்கீல் சிவக்குமார் கூறியதாவது:-

திருத்துறைப்பூண்டியில் பாரம்பரியமிக்க சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழைய நீதிமன்ற கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் அருகிலேயே அரசு அலுவலகங்களும் இயங்குகின்றன. ஆனால் இந்த கட்டிடத்தை ஏதோ ஒரு காரணத்தால் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டுவிட்டனர். மேலும் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகின்றன.

அப்படி இருக்கும்போது அரசுக்கு சொந்தமான இந்த கட்டிடத்தை பராமரித்து புதுப்பித்து, அரசின் பல்வேறு திட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அரசுக்கும் செலவினங்கள் குறையும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலதாமதம் இல்லாமல் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கட்டிடத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது

பள்ளங்கோவிலை சேர்ந்த சமூகஆர்வலர் அன்புவீரன்:-

திருத்துறைப்பூண்டி நகரில் ஒரே இடத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கினால் அனைத்து பணிகளுக்கும் ஒவ்வொரு இடத்திற்கு அலையாமல் ஒரே இடத்திலேயே பெறக்கூடிய வாய்ப்பு திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ளது. அங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், இந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் அப்படியே கிடக்கிறது.

இங்கிருந்து விஷ பூச்சிகள் அருகிலேயே கருவூலத்துக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் அங்குள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தன்மை குறைவாகவே உள்ளது.எனவே அந்த பாரம்பரியம் மிக்க கட்டிடத்தை உடனடியாக புதுப்பித்து பழமை மாறாமல் அரசு துறையை சார்ந்த ஏதாவது ஒரு அலுவலகத்தை அங்கு நிறுவினால் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்