மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர் என்றும், மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து உள்ளார்.

Update: 2022-12-23 18:45 GMT

கோவை

தமிழகத்தில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர் என்றும், மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து உள்ளார்.

அமைச்சர் ஆய்வு

கோவை கொடிசியா மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதற்காக மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் வருகை

கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறும் 3 அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில் நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பின்னர் கொடிசியா மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் பெற இதுவரை 20 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேதி நீட்டிக்கப்படுமா?

இந்த பேட்டியின்போது அமைச்சரிடம் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து கூறியதாவது:-

தமிழகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருகிறது. இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம்பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.

வருகிற 31-ந் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்து உள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

கரும்பு வழங்கப்படுமா?

மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக சில தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். எனவே அந்த தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இந்த பரிசுடன் சேர்த்து கரும்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருவதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மேயர் கல்பனா, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜ், பகுதி செயலாளர் சரத் மற்றும் வி.ஜி.கோகுல், செந்தில் கார்த்திகேயன், அசோக்பாபு ஆறுக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்