சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள்
மணல்மேடு அருகே நடுத்திட்டு கிராமத்தில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மணல்மேடு அருகே நடுத்திட்டு கிராமத்தில் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நடுத்திட்டு கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே வரதம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெருமாள்கோவில் தெரு சாலையின் வழியாக மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.
போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை போடப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக மேற்கண்ட சாலை சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்றன.
குண்டும், குழியுமான சாலை
2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கரடு, முரடான சாலையை கடந்து செல்லும்போது வாகனங்கள் பழுதடைவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மழை பெய்யும்போது சேதம் அடைந்த சாலையில் மழைநீர் தேங்கி பள்ளம் எது, மேடு எது என்று தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். அவசர தேவைகளுக்கு கூட அந்த சாலையின் வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற வாகனங்கள் எளிதில் செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.