புதுமண்ணியாற்றின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?

கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-05-15 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

முப்போகம்

டெல்டா மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக கடைமடை பகுதியில் ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி ஏற்பட்டு ஆண்டுக்கு ஒருபோகம் கூட சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வருவது புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனம் அளித்து இறுதியில் பழையாறு துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த புதுமண்ணியாற்றின் கிளை ஆறுகளும் தூர்ந்து கிடக்கிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறக்கும்போது கடைமடை பகுதியில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் நேரடியாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கிளை வாய்க்கால்கள் தூர்வார வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளரும், விவசாயியுமான ஞான புகழேந்தி கூறுகையில் கிராமப்புறங்களில் உள்ள கிளை வாய்க்கால்கள் சரியான முறையில் தூர் வாரப்படாததே இதற்கு முக்கிய காரணம். சில இடங்களில் வயலும், வாய்க்கால்களும் வேறுபாடு இல்லாமல் ஒன்றாகவே உள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து அறுவடை செய்து நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றால் அதனை பாதுகாக்க போதிய இடவசதி இல்லாததால் நெல் மழையில் நனைந்து சில நேரங்களில் முளைத்து விடுகின்றது.

நமக்கு நாமே திட்டம் போல் விவசாயத்தைப் பாதுகாக்க கிளை வாய்க்கால்களை பொக்லின் எந்திரத்தை வைத்து தூர்வார புதிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.மேலும் விவசாயத்தை மேம்படுத்த குறுகிய கால நெல் விதைகள், நுண்ணூட்ட உரங்கள் நடவு எந்திரம் போன்றவற்றை தரமாகவும், மானிய விலையிலும் குறித்த நேரத்திற்கு அரசு வழங்க வேண்டும். தரிசு நில மேம்பாட்டு திட்டத்தினால் கொள்ளிடம் கடைமடை பகுதியில் கூட பல வருடங்கள் தரிசாக கிடந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வேளாண்துறை மூலம் மீட்கப்பட்டு விவசாயிகளுக்கு மீண்டும் மானியம் வழங்கப்பட்டு விவசாயம் தொடர்ந்து செய்யும் அளவுக்கு நிலங்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. சிறுகுறு விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் இழந்து போன விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் நீர் மேலாண்மை திட்டத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு ஆய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்