சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில் பாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில் பாதை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-05 18:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

கள்ளக்குறிச்சி நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள சின்னசேலம், சேலம் போன்ற ஊர்களுக்கு பஸ்சிலேயே சென்று வந்தனர். இதனால் கால விரயம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் எனவும், கள்ளக்குறிச்சியில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்

அதன்பேரில் சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை 11 கிராமங்கள் வழியாக 16.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரெயில் பாதை அமைக்க ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில் வழித்தடத்தில் 2 பெரிய பாலங்களும், 23 சிறிய பாலங்களும், 9 சுரங்கப்பாதைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

ஆனால் கள்ளக்குறிச்சி தவிர சின்னசேலம் வடக்கு மற்றும் தெற்கு, கனியாமூர், வினைதீர்த்தாபுரம், பொற்படாக்குறிச்சி, இந்திலி, ஏமப்பேர், தச்சூர், தென்கீரனூர், கீழ்பூண்டி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்தல், நிலம் கையகப்படுத்துதல் பணிகள் நிறைவடைந்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள 120 உட்பிரிவுகளுக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் நிலம் அளவீடு செய்யும் பணி மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதுவரை நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நிறைவடையாமல் மந்தமாக நடைபெறுவதால் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில்கள் வளர்ச்சியடையும்

இதுகுறித்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் கூறுகையில், சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரெயில்வே பாதை அமைக்க வேண்டும் என்பது கள்ளக்குறிச்சி பகுதி மக்களின் நீண்ட கால கனவாக இருந்தது. இந்த திட்டம் தற்போது நடைபெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டால், அரிசி, சர்க்கரை மற்றும் விவசாய பொருட்களான மஞ்சள், பருத்தி ஆகியவைகள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவும், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதும் எளிதாக இருக்கும். இதனால் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ரெயில்வே பணி நிறைவடைந்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், பல்வேறு தொழில்கள் வளர்ச்சி அடையவும் நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.

நேரமும், கட்டணம் குறைவு

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பழக்கடை வியாபாரி இன்பராஜ் கூறுகையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நாள்தோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சென்னை, சேலம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் பஸ்களில் செல்வதற்கு கூடுதல் கட்டணமும், அதிக நேரமும் ஆகிறது. இந்நிலையில் ரெயில் பாதை அமைக்கும் பணி விரைந்து முடித்து பயன்பாட்டுக் கொண்டு வந்தால் பயண கட்டணம் மற்றும் நேரம் குறையும். மேலும் முதியவர்கள், நோயாளிகள் ரெயிலில் பயணம் செய்யும்போது படுக்கை வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளதால் அவர்கள் பயணம் செய்வது எளிதாக இருக்கும். இதே போல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டண சலுகை கிடைக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்