கடற்கரையில் முறிந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படுமா?
மண்டபம் அருகே உள்ள சீனியப்பா தர்கா கடற்கரையில் முறிந்து கிடக்கும் சவுக்கு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பனைக்குளம்,
மண்டபம் அருகே உள்ள சீனியப்பா தர்கா கடற்கரையில் முறிந்து கிடக்கும் சவுக்கு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சவுக்கு மரங்கள்
மண்டபம் யூனியன் சுந்தரமுடையான் அருகே உள்ளது சீனியப்பா தர்கா கடற்கரை. மீன் பிடி தொழிலை நம்பி இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் கடல் அலையின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் வனத்துறையினரால் பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட சவுக்கு மரங்கள் தற்போது பல மீட்டர் உயரத்தில் வளர்ந்து கடற்கரைக்கு அழகு சேர்க்கும் வகையில் காட்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் கடற்கரையில் வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்களில் பல மரங்கள் சூறாவளி காற்று காரணமாக முறிந்து விழுந்து கிடக்கின்றன.
பெரிய, பெரிய மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்து கிடப்பதால் கடற்கரை பகுதியே அலங்கோலமாக காட்சியளித்து வருகின்றது.
அகற்ற கோரிக்கை
பல ஆண்டுகளாக கீழே விழுந்து கிடக்கும் சவுக்கு மரங்களை அகற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இவ்வாறு விழுந்து கிடக்கும் சவுக்கு மரங்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறாகவும் உள்ளது. இங்கு வருபவர்கள் மரங்கள் தடுக்கி விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே சீனியப்பா தர்கா கடற்கரையில் முறிந்து விழுந்து கிடக்கும் சவுக்கு மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், கடல் அலையின் வேகம், கடல் அரிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சவுக்கு மரக்கன்றுகளை அந்த பகுதியில் மீண்டும் பல இடங்களில் நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.